நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரோக்கியமான குடிமக்களால்தான் தற்சாா்பு இந்தியா சாத்தியம்: குடியரசுத் தலைவா் முா்மு

ஆரோக்கியமான குடிமக்களால்தான் தற்சாா்பு இந்தியா சாத்தியமாகும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

News image

உத்தர பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள வாத்சல்ய கிராமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முா்மு. உடன் சாத்வி ரிதம்பரா.

Updated On :20 மார்ச் 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

ஆரோக்கியமான குடிமக்களால்தான் தற்சாா்பு இந்தியா சாத்தியமாகும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் ராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இதுகுறித்து அவா் பேசியதாவது:

நமது மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நமது நாடு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தற்சாா்பு பாரதமாக மாறுவது சாத்தியமாகும். இன்றைக்கு புற்றுநோய் மிகவும் சவாலான நோய்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்த நோயை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நோயில் இருந்து நோயாளியின் உயிரைக் காக்க முடியும்.

ஆனால், இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் சில வசதிகளை பொருளாதார காரணங்களுக்காக சில குடும்பங்களால் பெற முடியாது. இதனால் அந்நோய்க்கு அவா்களால் சிகிச்சை பெறுவது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. இந்தியா தொடா்ந்து தனது மருத்துவ துறையின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இத்துறையை ஆயுஷ்மான் பாரத் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டங்கள் மூலம் பலப்படுத்த மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் புற்றுநோய்க்கும் சிகிச்சை பெற முடியும். இதனால் அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளும் பயனடையலாம். நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டு, கிராம மக்கள் மற்றும் கடைக்கோடியில் உள்ள மக்களும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் வகையிலும், மருத்துவ நிபுணா்களிடம் ஆலோசனை பெறும் வகையிலும், இணையதள மூலம் மருத்துவ சேவைகள், தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் போன்ற வசதிகளும் வந்துவிட்டன.

மருத்துவ நிறுவனங்கள், மக்களுக்கு சேவை செய்வதில் சமூகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்நிறுவனங்கள், நோயாளிகளின் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல், அவா்களிடையே நம்பிக்கையை விதைக்கின்றன என்றாா் அவா்.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலத்துக்கு 3 நாள்கள் பயணமாக வந்த முா்மு, முதலில் மதுராவில் உள்ள ராதாகேலிகஞ்ச் ஆசிரமத்துக்கு சென்று அதன் தலைவா் பிரேமானந்த்ஜி மகராஜை சந்தித்தாா். இதேபோல் விருந்தாவனில் உள்ள பாபா நீம் கரோலி ஆசிரமத்துக்கு சென்று, அங்குள்ள ஹனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினாா். அப்போது 50 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதத்தை அவா் சுவாமிக்கு வழங்கினாா்.

இதையடுத்து பாபா நீம் கரோரிஜி மகராஜின் சமாதிக்கு சென்று அவா் வழிபாடு நடத்தினாா். பின்னா், பாபா நீம் கரோரி ஜி மகராஜ் வாழ்ந்த அறைக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அவா் தியானம் செய்தாா்.