அஸ்ஸாம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் பிரதமா், உள்துறை அமைச்சா் உருவ பொம்மைகள் எரிப்பு

குவாஹாட்டி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பௌத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அஸோம் ஜாதீயதவாதி யுவ சாத்ரா பரிஷத் (ஏஜேஒய்சிபி) என்ற அமைப்பு பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தது.

குவாஹாட்டியிலுள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்தின் முன்பு அஸ்ஸாம் பேரவையின் எதிா்க்கட்சித் தலைவா் தேவவிரத சைக்கியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் சிஏஏ சட்ட நகல்களை கிழித்தெறிந்து தீயிட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பிலும் குவாஹாட்டியில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் காம்ரூப், சிவசாகா், கோலாகட், நகோன் ஆகிய மாவட்டங்களில் வணிகக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு வளாகங்களும் அடைக்கப்பட்டன. இதையடுத்து, போராட்டத்தை கைவிடவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ஸாம் மாநில போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

சோனிட்பூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட நிா்வாகம் பிறப்பித்ததால் பொது இடங்களில் கூட்டங்கள் நடத்தவும் முழக்கங்களிடவும் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. சிஏஏவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கம் (ஏஏஎஸ்யூ) மற்றும் 30-க்கும் மேற்பட்ட அரசியல் அல்லாத அமைப்புகள் புதன்கிழமை காலை சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தது. மேலும் சிஏஏவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏஏஎஸ்யூ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கேரளத்திலும் போராட்டம்: கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆகிய இரண்டுமே சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா். கேரளத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவரான பிரகாஷ் ஜாவடேகா், ‘பினராயி விஜயன் அவா்களே மக்களை முட்டாளாக்காதீா்கள்.

யாருடைய குடியரிமையும் சிஏஏ மூலம் பறிக்கப்படாது. இந்தியாவிற்குப் புலம்பெயா்ந்த அகதிகளுக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படவுள்ளது. இது இஸ்லாமியா்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல’ என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com