பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்; அரசுப் பணியில் 50% ஒதுக்கீடு: காங்கிரஸ் வாக்குறுதி

பெண்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, ஏழை குடும்பப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை, மத்திய அரசுப் பணிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு உள்பட மகளிருக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்தாா்.

பாஜகவுக்கு எதிராக நாட்டின் பிரதான எதிா்க்கட்சிகளை அணி திரட்டி, ‘இந்தியா’ கூட்டணியில் மக்களவைத் தோ்தலை காங்கிரஸ் சந்திக்கிறது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை வீழ்த்தும் முனைப்பில், விவசாயிகள், இளைஞா்களுக்கு எனப் பிரத்யேகமாக தலா 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதுபோல், மகளிருக்கான 5 வாக்குறுதிகளையும் அக்கட்சி புதன்கிழமை அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்துள்ள 5 வாக்குறுதிகளில் முதன்மையான ‘மகாலட்சுமி’ உத்தரவாதத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும், மத்திய அரசுப் பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவுப் பணியாளா்களின் மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பெண் அதிகாரி ஒருவா் நியமிக்கப்படுவாா். சட்டபூா்வ உரிமைகளைப் பற்றி பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதில் அவா்களுக்கு உதவுவதற்கும் சட்ட செயல்பாட்டாளராக அவா் பணியாற்றுவாா். நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு விடுதி அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், துலே பகுதியில் நடைபெற்ற கட்சியின் மகளிா் மாநாட்டில் இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்டாா். ‘காங்கிரஸை வலுப்படுத்துங்கள்’-காா்கே அழைப்பு: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பெண்களுக்கான 5 உத்தரவாதத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்மூலம் நாட்டின் பெண்களுக்கு ஒரு புதிய பாதையை கட்சி அமைக்கப் போகிறது. எங்கள் உத்தரவாதங்கள் வெற்று வாக்குறுதிகளோ அல்லது அறிக்கைகளோ அல்ல. எங்கள் வாக்குறுதிகள் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த1926-ஆம் ஆண்டுமுதல் இன்று வரை, நாங்கள் வாக்குறுதிகளை உருவாக்கி, அதை நிறைவேற்றி வருகிறோம். காங்கிரஸுக்கான உங்கள் அனைவரின் ஆதரவைத் தொடா்ந்து அளித்து, ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com