ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உரிமை மறுக்கப்பட்ட பட்டியலினப் பெண்ணுக்கு செருப்பு மாட்டிவிட்ட ராகுல்

உயர்சாதியினரால் கொடுமைப்படுத்தப்பட்ட பட்டியலினப் பெண்களுடன் ராகுல் காந்தி உரையாடல்.

News image
உரிமை மறுக்கப்பட்ட பட்டியலினப் பெண்ணுக்கு செருப்பு மாட்டிவிட்ட ராகுல்
Updated On :13 மார்ச் 2024, 9:48 am

Ravivarma.s

செருப்பு அணிய விடுவதில்லை எனக் கூறி அழுத பட்டியலின பெண்ணுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தன் கையால் செருப்பு போட்டுவிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூரில் தொடங்கிய ராகுலின் பயணம், தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பண்டேல்கண்டில் உள்ள பட்டியலினப் பெண்கள் சிலருடன் செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, செருப்பு அணியவும், குடிக்க தண்ணீர் எடுக்கவும்கூட தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கண்ணீர் விட்ட பெண்ணுக்கு தன் கையால் ராகுல் காந்தி செருப்பு அணிவித்தார்.

பட்டியலினப் பெண்களுடன் ராகுல் காந்தி நிகழ்த்திய உரையாடலில்:

பெண்கள்: நாங்கள் கிராமத்துக்குள் செருப்பு அணிந்து சென்றால், எங்களை கெட்ட சகுனம் எனக் கூறுவார்கள். செருப்புடன் கிராமத்துக்குள் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்பார்கள்.

ராகுல் காந்தி: உங்கள் சமூகத்தில் எத்தனை குடும்பத்தினர் உள்ளீர்கள்?

பெண்கள்: 4 குடும்பங்கள்.

ராகுல் காந்தி: வெறும் 4 குடும்பம் தானா? அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?

பெண்கள்: குடிநீர் எடுக்க கிணற்றுக்கு சென்றால், நீண்ட நேரம் எங்களை நிற்க வைப்பார்கள்.

ராகுல் காந்தி: யார் உங்களிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள்?

பெண்கள்: பிராமணர்கள், தாகூர் உள்ளிட்ட உயர்சாதியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார்கள். அவர்கள் திருமணத்துக்கு எங்களை அழைப்பார்கள். அங்குச் சென்றால் குப்பைத் தொட்டி அருகிலும், சாக்கடை அருகிலும் உட்காரச் சொல்வார்கள். இருக்கையில் அமர்ந்தால், அங்கிருந்து அடித்து விரட்டுவார்கள்.

நாங்கள் எப்படி சாப்பிடுவது? நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. இந்தக் கொடுமைகளை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள்? சுதந்திர நாடு எனக் கூறுகிறார்கள், ஆனால் நாங்கள் அப்படி வாழவில்லை.

செருப்பு போட அனுமதி அளித்தால் போடுவேன், இல்லையென்றால் கைகளிலேயே வைத்துக் கொள்வேன் என்றார்.

YouTube video thumbnail

உடனடியாக, அந்த பெண்ணின் கையில் இருந்த செருப்பை வாங்கி ராகுல் காந்தி தன் கைகளால் போட்டுவிட்டார்.

மேலும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கூறுகையில், “பண்டேல்கண்ட் மலைப் பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இதுபோன்ற நிலை இன்னமும் இருக்கிறது. பட்டியலின மக்கள் நிம்மதியாக வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியாத நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, அங்கிருந்த பட்டியலின பெண்களுடன் ராகுல் காந்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.