திருட்டு வழக்கு விசாரணையில் திருப்பம்: கேரளத்தை உலுக்கிய கொலைகள்!

திருட்டு வழக்கு விசாரணையில் திருப்பமாக கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருட்டு வழக்கு விசாரணையில் திருப்பம்: கேரளத்தை உலுக்கிய கொலைகள்!

ஒரு சிறு திருட்டு வழக்கை விசாரிக்கச் சென்ற காவலர்களுக்கு, நிச்சயம் தெரிந்திருக்காது, 2கொலை வழக்குகளின் குற்றவாளி சிக்குவார் என்று.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் கக்கட்டுக்காடா கிராமம், எந்த ஓசையுமின்றி அமைதியாக ஒரு மூலையில் இருந்தது. எந்த விதமான சலசலப்புமின்றி ஓடிக்கொண்டிருந்த இந்த கிராம மக்களின் வாழ்க்கையில், திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது கொலை வழக்குகளும், கைது நடவடிக்கையும்.

இரண்டு கொலை வழக்குகளிலும் கொலையானவர்கள் பற்றியோ, கொலை பற்றியோ இதுவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

முதல் கொலை 2016ஆம் ஆண்டு நடந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் பிறந்த 4 நாள்களே ஆன குழந்தை. இரண்டாவது கொலை 2023ஆம் ஆண்டு 60 வயது நபர். ஒரு திருட்டு வழக்கை விசாரிக்கச் சென்ற காவலர்கள், ஒரு வீட்டில் இரண்டு பெண்களை அறைக்குள் பூட்டி வைத்து மந்திரவேலைகள் செய்து வந்த நபரைப் பற்றி கண்டுபிடித்ததோடு, ஏழு ஆண்டுகள் இடைவெளியில் அவர் செய்த இரண்டு கொலைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

மார்ச் 2ஆம் தேதி நடந்த திருட்டுச் சம்பவத்தில் இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒருவர் விஷ்ணு விஜயன் (27), மற்றொருவர் நிதீஷ் (31).

இருவரிடமும் நடத்திய விசாரணைக்குப் பிறகு, அவர்களின் இருப்பிடங்களை காவல்துறையினர் சோதனையிட்டனர். அவர்களது குடும்பப் பின்னணியையும் விசாரித்தனர். அப்போதுதான், அந்த வீட்டில், விஷ்ணுவின் தாயும், சகோதரியும் ஒரு அறையில் பூட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போதுதான், நிதீஷ் பற்றி அவரது சகோதரி வித்யா பல திடுக்கிடும் விஷயங்களைக் கூறியிருக்கிறார். நிதீஷ், வித்யாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், நிதீஷ் 2 கொலைகளை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில், வித்யா - நிதீஷுக்குப் பிறந்த குழந்தையை கொன்றது பற்றி காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இதோடு, வித்யா - விஜயன் தந்தையை, ஒரு வாய்த்தகராறில் நிதீஷ் கொலை செய்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

நிதீஷ், தனது மந்திர சக்தியால் விஜயனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களைப் பற்றி இவர்களது உறவினர்களுக்குத் தெரியாத வகையில் பல வீடுகள் மாறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை மற்றும் வீட்டில் அடைத்து வைத்திருந்ததால், வித்யாவும் அவரது தாயும் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர்.

விஷ்ணு மட்டுமே இந்த வீட்டில் வசித்து வருவதாக அக்கம் பக்கத்தினர் அறிந்திருந்தனர். அதில் இரண்டு பெண்கள் வசித்து வந்ததே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

மிகவும் சிக்கலான இந்த வழக்கில், காவல்துறையினர் ஆதாரங்களையும், உடல்களையும் கண்டுபிடித்து அடையாளம் காண தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com