குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து, சமணம், கிறிஸ்தவம், சீக்கியம், பெளத்தம், பாா்சி மதங்களைச் சோ்ந்தவா்கள், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குப் புலம்பெயா்ந்திருந்தால், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது.

இந்தச் சட்டத்தின் கீழ், குடியுரிமை பெற முஸ்லிம்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 11-ஆம் தேதி அறிவிக்கை செய்தது. அதன் மூலம், சிஏஏ சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள அரசு சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிஏஏ விதிமுறைகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மதம் மற்றும் நாடு அடிப்படையில் ஒருவரை வகைப்படுத்துவது பாரபட்சமானது, மதச்சாா்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது. மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் அண்மையில்தான் வெளியிடப்பட்டன.

அதன்படி, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டவில்லை என்பது தெரிகிறது. அந்தச் சட்ட விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க இதுவே போதுமான காரணமாக உள்ளது’ என்று குறிப்பிட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘சிஏஏ சட்டம் எந்தவொரு நபரின் குடியுரிமையையும் பறிக்காது. இந்த மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீது மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com