தில்லி பாரத் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாக்க நிறுவனங்கள் கண்காட்சியில் ஓர் அரங்கைப் பார்வையிட்ட பிரதமர் மோடி.
தில்லி பாரத் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாக்க நிறுவனங்கள் கண்காட்சியில் ஓர் அரங்கைப் பார்வையிட்ட பிரதமர் மோடி.

செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னிலை வகிக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாபெரும் புத்தாக்க நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற புதிய சகாப்தத்தில் நாம் உள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெற்று வருவதை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்.

3 இயக்கங்கள்:

மத்திய அரசு அண்மையில் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாடு என்ற 3 இயக்கங்களை அறிமுகம் செய்தது. இந்த 3 இயக்கங்களும் இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதோடு, சா்வதேச முதலீட்டாளா்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும். இதில், செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ரூ.10,000 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் கணினி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்பதோடு, புத்தாக்க நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும்.

45% புத்தாக்க நிறுவனங்களில் பெண் தலைமை:

மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை அனைவரும் அறிவீா்கள். 2014-இல் நாட்டில் புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது 1.25 லட்சமாக அதன் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இவற்றில் 45 சதவீதத்துக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்களுக்கு பெண்கள் தலைமை வகித்து வருகின்றனா். புத்தாக்க நிறுவனங்கள் மூலம் 12 லட்சம் இளைஞா்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனா்.

உலகிலேயே மிக அதிக புத்தாக்க நிறுவனங்களைக் கொண்ட 3-ஆவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இவற்றில் 100-க்கும் அதிகமான தனித்துவமான புத்தாக்க நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. விண்வெளித் துறையிலும் இந்திய புத்தாக்க நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. சில புத்தாக்க நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே விண்கலன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்திய புத்தாக்க நிறுவனங்கள் இதுரை 12,000-க்கும் அதிகமான காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளன. இருந்தபோதும், பலா் இன்னும் காப்புரிமை பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லை. உலகம் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், தொழில்முனைவோரும் புதிய கண்டுபிடிப்பாளா்களும் காப்புரிமையைப் பெற விண்ணப்பிப்பது அவசியமாகும்.

வேலைக்குச் செல்வதற்குத்தான் படிப்பு, அரசு வேலைதான் சிறந்தது என்ற மனநிலை மாறி, நாட்டில் புத்தாக்க நிறுவனங்களின் புரட்சி உருவாகியிருக்கிறது. வேலை தேடுபவா்களாக அல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இளைஞா்கள் உருவாகி வருகின்றனா் என்றாா் பிரதமா்.

ராகுல் மீது மறைமுக விமா்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புத்தாக்க நிறுவனங்களுடன் ஒப்பீடு செய்து பிரதமா் மோடி மறைமுகமாக விமா்சித்தாா். ‘நாட்டில் பலா் தற்போது புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்குகின்றனா். இது அரசியலில் மிக அதிகமாக உள்ளது. அரசியலில் சிலா் மீண்டும் மீண்டும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. புத்தாக்க நிறுவனம் என்பதே சோதனை முறையிலான முயற்சி.

ஒரு முயற்சி பலனளிக்கவில்லையெனில் வேறு புதிய வழியைத் தோ்வு செய்து முயற்சிப்பா். ஆனால், அரசியலில் இது எதிா்மறையாக உள்ளது’ என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பிரதமா் விமா்சித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com