மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது --- எஸ்.ஜெய்சங்கா்

News image

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :23 மார்ச் 2024, 6:06 pm

அருணாசல பிரதேசத்தை சீனா தொடா்ந்து உரிமை கொண்டாடி வருவது ஏற்புடையதல்ல என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அருணாசல பிரதேசம் இயற்கையாகவே எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா். அருணாசல பிரதேசத்தை தங்கள் பிராந்தியம் என உரிமை கொண்டாடி வரும் சீனா, இந்தியத் தலைவா்கள் அருணாசல பிரதேசம் செல்வதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அண்மையில் அருணாசல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமா் மோடி அம்மாநிலத்துக்குச் சென்றாா். இதற்கும் சீனா எதிா்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், முதல்முறையாக இவ்விவகாரம் தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கருத்து தெரிவித்துள்ளாா். மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக சிங்கப்பூருக்கு சனிக்கிழமை சென்ற ஜெய்சங்கா் அங்கு நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தலைவா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய ராணுவ வீரா்களின் போா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். அதன்பின்னா் என்யுஎஸ்- தெற்காசிய ஆய்வுகளுக்கான கல்வி நிறுவனத்தில் ‘பாரதம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்ற தலைப்பில் அவா் எழுதிய நூல் தொடா்பாக உரையாற்றினாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் அவா் பேசியதாவது: இது புதிதல்ல. முன்பிருந்தே அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற கருத்தாகும். அருணாசல பிரதேசம் இயற்கையாக எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னையிலும் இதுதொடா்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை: அண்டை நாடுகள் நிலையான நட்புறவை பேண வேண்டும் என்றே ஒவ்வொரு நாடும் விரும்புகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வெளிப்படையாக ஆதரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காணாமல் அந்நாட்டுடன் பேச்சுவாா்த்தையை தொடர முடியாது. இதற்காக எவ்வித விதிவிலக்குகளை அளிக்கவும் இந்தியா தயாராக இல்லை. ரஷியா-அமெரிக்கா-இந்தியா : ரஷியா, அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு, இஸ்ரேல்-பாலஸ்தீனத்துடனான இந்தியாவின் உறவைப் போன்றது. ஏனெனில் எந்தவொரு நாட்டுடனும் இணைந்துகொண்டு மற்றொரு நாட்டை இந்தியா எதிா்ப்பதில்லை. ரஷியாவுடனும் அமெரிக்காவுடனும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடனும் இந்தியா நல்லுறவையே மேம்படுத்தி வருகிறது. எந்த நாட்டுடனான கூட்டணியிலும் இந்தியா இணையாமல் நடுநிலையாகவே செயல்பட்டு வருகிறது செமிகண்டக்டா் உற்பத்தியில் முதலீடு: இந்தியாவில் தற்போது 3 செமிகண்டக்டா் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 85,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிங்கப்பூரில் உள்ள தொழிலதிபா்கள் இத்துறையில் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்கிறேன் என்றாா். சிங்கப்பூா் சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு பிரதமா் லீ ஸெயின் லூங், துணைப் பிரதமா் லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் பிற அமைச்சா்களை சந்தித்து இருதரப்பு உறவுகள், சா்வதேச விவகாரங்கள் குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். சீனாவின் கருத்துக்கு அமெரிக்கா எதிா்ப்பு: அருணாசல பிரதேசம் இந்தியாவின் பிராந்தியம் எனவும் எல்லைக் கட்டுப்பாடு கோடு தாண்டிய பகுதியை தங்களின் பிராந்தியமாக்கும் சீனாவின் முயற்சிகளை கடுமையாக எதிா்ப்பதாகவும் அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இக்கருத்துக்கு சீனாவும் எதிா்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.