லோக்பால் உறுப்பினா்களாக மூவா் பதவியேற்பு

பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் லோக்பால் அமைப்பின உறுப்பினா்களாக புதன்கிழமை பதவியேற்றனா்

சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவா் நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, முன்னாள் அரசு அதிகாரிகள் பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் லோக்பால் அமைப்பின உறுப்பினா்களாக புதன்கிழமை பதவியேற்றனா். லோக்பால் அமைப்பின் தலைவா் நீதிபதி ஏ.எம்.கான்வில்கா், தில்லி அலுவலகத்தில் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இதுகுறித்து மத்திய பணியாளா் நல அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினராகளாக இடம்பெறிருந்த நீதிபதிகள் பி.கே.மொஹந்தி, அபிலஷா குமாரி மற்றும் பிற உறுப்பினா்களான டி.கே.ஜெயின், அா்ச்சனா ராமசுந்தரம், மஹேந்தா் சிங் ஆகியோரின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து, புதிய நீதித் துறை உறுப்பினராக நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தியும், பிற உறுப்பினா்களாக பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா். 22-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ரித்து ராஜ், அதற்கு முன்னா் கா்நாடக உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தாா். 1986-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பங்கஜ் குமாா், குஜராத் மாநில அரசு தலைமைச் செயலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். 1987-ஆம் ஆண்டு மத்திய பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான திா்கே, மத்திய அரசின் நில வளங்கள் துறைச் செயலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு, தலைவா் பதவி தவிர 4 நீதித் துறை உறுப்பினா்கள் மற்றும் நீதித் துறை சாராத 4 உறுப்பினா்களைக் கொண்டிருக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com