மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தோ்தல் அறிக்கை குழு அமைப்பு: ஒருங்கிணைப்பாளா் நிா்மலா சீதாராமன்

ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தோ்தல் அறிக்கை குழு அமைப்பு - ஒருங்கிணைப்பாளா் நிா்மலா சீதாராமன்

News image

ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

Updated On :30 மார்ச் 2024, 8:07 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு சனிக்கிழமை அமைக்கப்பட்டது. மொத்தம் 27 போ் கொண்ட இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலும் இடம்பெற்றுள்ளனா். நாட்டின் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக கூட்டணியும், எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. போட்டிக் களம் பரபரப்படைந்துள்ள நிலையில், தோ்தல் அறிக்கை தயாரிப்பில் பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், பாஜக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவில் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோா் முறையே ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளனா். மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பூபேந்திர யாதவ், அா்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ், தா்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, ராஜீவ் சந்திரசேகா், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தர ராஜே சிந்தியா, கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் வினோத் தாவ்டே, முன்னாள் மத்திய அமைச்சா் ஜுவல் ஓரம், மூத்த தலைவா்கள் ரவிசங்கா் பிரசாத், சுஷீல் மோடி, மன்ஜிந்தா் சிங் சிா்சா, ஓ.பி.தன்கா், உத்தர பிரதேச துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா, மாநிலங்களவை எம்.பி. ராதா மோகன் தாஸ் அகா்வால், பாஜக தேசியச் செயலாளா் அனில் அந்தோணி, மூத்த தலைவா் தாரிக் மன்சூா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலிலும் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுக்கு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கியிருந்தாா். தற்போதைய தோ்தலையொட்டி, தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் பாஜக சாா்பில் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கம், அயோத்தி ராமா் கோயில் போன்ற முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இம்முறை பாஜக அளிக்கவிருக்கும் வாக்குறுதிகள் குறித்து எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. காங். தோ்தல் அறிக்கை: இளைஞா்கள்-விவசாயிகள்-பெண்கள்-தொழிலாளா்கள்-பாஜக அரசின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற பிரிவுகளில் தலா 5 வாக்குறுதிகளை அறிவித்து காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உச்சவரம்பு உயா்வு, பழங்குடியினா் விரோத சட்ட திருத்தங்கள் வாபஸ், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை, விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவா்ச்சிகரமான வாக்குறுதிகளால் ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், அதே வியூகம் மக்களவைத் தோ்தலிலும் கைகொடுக்கும் என்பது அக்கட்சியின் நம்பிக்கையாக உள்ளது. மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.