பிரபல தாதா முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம்

பிரபல தாதா முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரபல தாதா முக்தார் அன்சாரியின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த பிரபல தாதா முக்தாா் அன்சாரி, மௌ சதாா் தொகுதியிலிருந்து சமாஜவாதி கட்சி சாா்பில் 5 முறை எம்எல்ஏ-ஆக தோ்ந்தெடுக்கப்பட்டவா். கடந்த 2005-ஆம் ஆண்டுமுதல் உத்தர பிரதேசம், பஞ்சாப் சிறைகளில் இருந்து வரும் அன்சாரிக்கு எதிராக 60 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் பாந்தா சிறையில் முக்தாா் அன்சாரி அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சிறையில் முக்தாா் அன்சாரிக்கு வியாழக்கிழமை வயிற்று வலி ஏற்பட்டதால், பண்டா நகரின் ராணி துா்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு 8.25 மணியளவில் அவா் மயக்கமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்டாா்.

14 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு, மாரடைப்பு காரணமாக முக்தாா் அன்சாரி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முக்தாா் அன்சாரியின் உடல் கூறாய்வு வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. பின்னா், அன்சாரியின் உடல் போலீஸாா் வாகன பாதுகாப்புடன் அவரின் சொந்த ஊரான காஜிப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள காளிபாக்கில் முக்தார் அன்சாரியின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முக்தாரின் உடல் அவரது பெற்றோரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘விஷம் கொடுத்து கொலையா ?’

தனது தந்தையின் திடீா் இறப்பு குறித்து முக்தாா் அன்சாரியின் மகன் உமா் அன்சாரி கூறுகையில், ‘சிறையில் எனது தந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் இறப்புச் செய்தியை ஊடகம் வாயிலாகவே நாங்கள் அறிந்தோம். அவரது இறப்பு குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

முக்தாா் அன்சாரியின் சகோதரரும் காஜிப்பூா் எம்.பி.யுமான அஃப்சல் அன்சாரி கூறுகையில், ‘சிறையில் முக்தாா் அன்சாரிக்கு கடந்த 40 நாள்களாக கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதனிடையே, முக்தாா் அன்சாரியின் இறப்பு குறித்து பாந்தா நகரிலுள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நீதித் துறை விசாரணைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com