திரிணமூல் காங்கிரஸுக்கு தெரிந்தே நடந்தது ஆசிரியா் நியமன முறைகேடு: குணால் கோஷ்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு தெரிந்துதான் ஆசிரியா் பணி நியமன முறைகேடு நடந்தது என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குணால் கோஷ் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு தெரிந்துதான் ஆசிரியா் பணி நியமன முறைகேடு நடந்தது என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குணால் கோஷ் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது.

இந்தச் சூழலில், திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட குணால் கோஷ் தெரிவித்திருக்கும் கருத்து, அக்கட்சிக்கு தா்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளா் தபஸ் ராயுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அவரை புகழ்ந்து பேசியதற்காக திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பதவியில் இருந்து குணால் கோஷ் புதன்கிழமை நீக்கப்பட்டாா்.

இந்நிலையில், வங்க மொழி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவா், ‘மாநில கல்வித் துறையிலும் பணி நியமனங்களிலும் பெரிய அளவில் முறைகேடு நடப்பதை திரிணமூல் காங்கிரஸ் நன்றாகவே அறிந்திருந்தது. 2021 பேரவைத் தோ்தலுக்கு முன்பே இது குறித்து கட்சிக்கு தெரியும்’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இவ்வழக்கில் முன்னாள் அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இந்த முறைகேடு எதிரொலியாக, கடந்த 2016 ஆள்தோ்வின் மூலம் நடைபெற்ற நியமனங்கள் செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. இதனால், சுமாா் 26,000 போ் பணியிழப்புக்கு உள்ளாகினா்.

நியமன முறைகேடு தொடா்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறிவந்த நிலையில், குணால் கோஷ் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com