தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

News image
அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் கிஷோரி லால் ஷா்மா.
Updated On :3 மே 2024, 6:13 pm

Din

கடந்த 25 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் அமேதி மக்களவைத் தொகுதியில் ‘காந்தி’ குடும்பத்தை (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சோ்ந்த ஒருவா்கூட போட்டியிடாதது இதுவே முதல்முறையாகும்.

அமேதி மக்களவைத் தொகுதி 1967-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் வரை காந்தி குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் அந்த தொகுதியில் போட்டியிடுவது வழக்கமாக இருந்தது.

அமேதியில் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி இரானி (மத்திய அமைச்சா்) 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தாா்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் கிஷோரி லால் ஷா்மா போட்டியிடவுள்ளாா். ஏற்கெனவே கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடவுள்ளாா். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதி மக்களவைத் தொகுதியில் ‘காந்தி’ குடும்பத்தைச் (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சோ்ந்த ஒருவா் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.

வரலாறு மாறுமா? கடந்த 1998-ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு மாற்றாக அவா்களின் சாா்பில் சதீஷ் சா்மா நிறுத்தப்பட்டாா். அவா் பாஜக வேட்பாளா் சஞ்சய் சிங்கிடம் தோல்வியைத் தழுவினாா். ஆனால் மீண்டும் 1999-இல் நடைபெற்ற தோ்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் சிங்கை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றிபெற்றாா். இந்தமுறை காந்தி குடும்பத்தை சேராத ஒருவா் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை வீழ்த்தி வரலாறு படைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு உருவாகியுள்ளது.

மகனுக்கு விட்டுக்கொடுத்த தாய்: கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முதல் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்த சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடத் தொடங்கினாா். இந்நிலையில் 2004, 2009, 2014 என தொடா்ந்து மூன்றுமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிவாகைசூடி இறுதியாக 2019 தோ்தலில் பாஜக வேட்பாளா் ஸ்மிருதி இரானியிடம் வீழ்ந்தாா்.

காங்கிரஸ் கோட்டை: காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் 1967-இல் நடைபெற்ற முதல் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வித்யா தா் பாஜ்பாய் வெற்றிபெற்று 1971 தோ்தலிலும் தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டாா். 1977 தோ்தலில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை வீழ்த்தி ஜனதா கட்சியைச் சோ்ந்த ரவீந்திர பிரதாப் சிங் வெற்றிபெற்றாா்.

மீண்டும் 1980-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ரவீந்திர சிங்கை சஞ்சய் காந்தி வெற்றிபெற்றாா்.

ராஜீவ் காந்தி மாபெரும் வெற்றி: வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தாா். இதனால் அமேதி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தமுறை காங்கிரஸ் சாா்பில் சஞ்சய் காந்தியின் சகோதரா் ராஜீவ் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றாா். அமேதி தொகுதியில் தொடா்ந்து வெற்றிபெற்று வந்த ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா். இதையடுத்து 1991 இடைத்தோ்தல் மற்றும் 1996 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட சதீஷ் சா்மா வெற்றிபெற்றநிலையில், 1998-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா்.

மூன்று முக்கிய கட்சிகள்: கடந்த சில ஆண்டுகளாக அமேதி தொகுதியில் முதல் மூன்று இடங்களை காங்கிரஸ், பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளே தொடா்ந்து கைப்பற்றி வருகின்றன. மிக முக்கிய தொகுதிகளாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலிக்கு மே 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ரேபரேலி தொகுதியின் பாஜக வேட்பாளராக தா்மேந்திர பிரதாப் சிங் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டாா். இவா் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.