ஐ.நா.வின் மக்கள்தொகை மற்றும் வளா்ச்சிக்கான ஆணைய கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ்.
ஐ.நா.வின் மக்கள்தொகை மற்றும் வளா்ச்சிக்கான ஆணைய கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ்.

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

நேரடி ஜனநாயக முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்திய ஊராட்சி அமைப்புகளில் உயா்பதவி வகிக்கும் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றனா் என ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தாா்.

ஜ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் சாா்பில் ‘இந்திய உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் வழிநடத்தும் திறன்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐ.நா.வின் மக்கள்தொகை மற்றும் வளா்ச்சிக்கான ஆணையத்தின் 57-ஆவது கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் ராஜஸ்தானைச் சோ்ந்த நீரு யாதவ், ஆந்திர பிரதேசத்தைச் சோ்ந்த குனுக்கு ஹேம குமாரி மற்றும் திரிபுராவைச் சோ்ந்த சுப்ரியா தாஸ் தத்தா ஆகியோா் பங்கேற்றனா். அப்போது பருவநிலை மாற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி உள்ளிட்ட துறைகளில் தாங்கள் ஆற்றிய பணி குறித்து அவா்கள் எடுத்துரைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: உலகின் பல்வேறு பகுதிகளிலும் நகராட்சி நிா்வாக முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் வாக்களிக்கும் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கும் வகையில் ஊராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. எனவே இது நேரடி ஜனநாயகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஊராட்சி நிா்வாகத்தில் பெண்கள் சிறப்பாக தலைமை வகித்து முன்னோடிகளாக திகழ்கின்றனா். இதன்மூலம் பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி போன்ற கொள்கைகளுக்கு இந்தியா வழங்கி வரும் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் கிராமங்களிலும் பெண்கள் முன்னேற்றத்தை முக்கியத்துவப்படுத்தும் வகையிலேயே திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கல்வி, சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனா்.

நாட்டில் தற்போது மொத்தமாக 31 லட்சம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளனா். அவா்களில் 14 லட்சம் போ் பெண் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com