கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொண்டு ஒரு தொடர்கதை!

'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று அஹிம்சைக்கு யுத்தப் படை திரட்டிய நாமக்கல் கவிஞருக்கும் வரலாற்றில் ஏது முற்றுப்புள்ளி?

News image

தோழர் ஆர். நல்லகண்ணு

Updated On :23 மார்ச் 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

பீ.ஏ. சித்திக்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 18.03.2026 அன்று அடுத்த மூன்று மாதங்களில் பதவிக்காலம் நிறைவுறும் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தற்போதைய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் முதலான 59 உறுப்பினர்களுக்கான பிரியாவிடைப் பேச்சில் பிரதமர் மோடி குறிப்பிட்ட வார்த்தைகள், இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகத் தேவையான வார்த்தைகளாகும்.

அரசியல் பயணத்தில் முற்றுப்புள்ளி இல்லை என்கிற அவரின் வார்த்தைகள், மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற மேலவையில் பதவி வகித்து, விடை பெறுபவர்களுக்கானது மட்டுமல்ல. மக்கள் பணிகளுக்கான பொது வாழ்க்கை பயணத்தில் எந்தவித அதிகாரப் பொறுப்பும் சூட்டிக்கொள்ளாமல், சூட்டப்படாமல் மக்களோடு மக்களாக களப் பணியில் நிற்போருக்கும், நின்று மறைந்தோருக்கும் மிகப் பொருத்தமான கௌரவமான வார்த்தைகளாகும்.

நாடாளுமன்றம் கூடுகிறது என்றாலே மக்கள் மனங்களில் அலாதியான எதிர்பார்ப்பும், ஆர்வமான கவனிப்புகளும் இருக்கும். ஆளும் தரப்பு அறிவிக்கப்போகும் திட்டங்களின் மீது மக்களின் நம்பிக்கை விழிகள் பதிந்திருக்கும். ஆளும் தரப்பு தவறவிட்ட வாய்ப்புகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நற்காரியங்கள் மீதும், மக்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பர்.

இன்றோ 10 மணிக்கு கூடும் அவை, 5 நிமிஷங்களில் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் கூட முற்படும்போதே பிற்பகலுக்கு அவை ஒத்திவைக்கப்படுகிறது. பிற்பகலிலோ நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது என்ற செய்தியுடன் இந்திய ஜனநாயகத்தின் ஒருநாள் உழைப்பின்றி மறைகிறது.

பதவிக்காலம் நிறைவுறும் மூத்த அரசியல்வாதிகள் இன்றைய அடாவடிகளுக்கு உட்படாதவர்கள் என்பதால், அவர்களின் பொதுவாழ்வுக்கு முற்றுப்புள்ளி இல்லை என்று, ஒரு முடிவுரையில் முன்னுரை தந்திருக்கிறார் இந்திய பிரதமர்.

அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அமரர் நல்லகண்ணு வாழ்வாங்கு வாழ்ந்த நூறாண்டுகளில் பள்ளிப் பருவம் தொட்டே பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். விடுதலைப் போராட்ட வீரர்; சிறைக் கொட்டடிகளில் இளமை கழித்து, தலைமறைவு வாழ்வும், வாழ்ந்தவர். சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்புகளை இழந்திருந்தாலும், அவரின் பொது வாழ்வைப் பிரதமரின் வார்த்தைகளுடன் பொருத்திப் பார்த்தால் அரசியல் பயணத்தில் முற்றுப் புள்ளி இல்லை என்பதன் பொருள் மிகப் புனிதமானதாகவே விளங்கும்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர் லால் நேரு, தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தபோதே மறைந்த அண்ணா, பாரதப் பெருந்தலைவர் எனப் புகழப்பட்ட காமராஜர், இந்தியாவின் முதல் பெண் பிரதமராகவும், இரும்புப் பெண்மணி எனவும் போற்றப்பட்ட இந்திரா காந்தி, இந்திய குடியரசுத் தலைவராக, இளைஞர்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் போன்றோர் அதிகாரப் பதவிகளில் அமர்ந்து, மக்கள் மனங்களில் இடம்பெற்ற தலைவர்கள்; இவர்கள் மறைந்தபோது, மக்கள் கடைப்பிடித்த சோக வழிபாடுகளுக்கு சற்றும் குறைவற்றதாகவே அமரர் நல்லகண்ணுக்கு மக்கள் செலுத்திய இரங்கல் இருந்தது. பொது வாழ்வின் முற்றுப்புள்ளியாக எவராலும் பார்க்க முடியாதது.

எங்கோ சந்து பொந்தில் இருக்கும் ஒரு குடிமகனின் இல்லத்தில், துயர காரிய மொன்று, நிகழ்ந்துவிட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர் உறவு, நட்புகளைத் தாண்டி அந்தப் பகுதியில் மக்கள் பிரதிநிதியாக வலம் வரும் சாதாரண வார்டு உறுப்பினரே. அந்த மக்கள் பிரதிநிதிக்கு மரணம் நேர்ந்த வீட்டுக்காரர் வாக்களித்திருப்பாரோ இல்லையோ, அந்த உறுப்பினர் துயரத்தில் காட்டும் மனமொத்த அக்கறை தொடரும் நிலையில், அந்த வார்டு உறுப்பினரின் பொது வாழ்க்கைக்கு ஏது முற்றுப்புள்ளி?

94 வயதைத் தொட்டும், இன்றளவில் பொதுவாழ்வில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முற்றுப்புள்ளி இல்லா பொதுவாழ்வின் முழுப் பரிமாணமாக கண்முன் காட்சி தருபவர். காமராஜரால், ஆசீர்வதிக்கப்பட்டவர், மாவீரன் எனப் புகழப்பட்டவர்.

காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியுடன் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த நெடுமாறன் 1979-இல் காங்கிரஸ் - திமுக கூட்டணி உருவானபோது அது பொருந்தாக் கூட்டணி என தனித்து அரசியல் இயக்கம் கண்டு எம்.ஜி.ஆரின் கூட்டு பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்து, பின்னர் ஈழத் தமிழரின் நல்வாழ்வுக்காக தன் பயணத்தை இன்றளவும் தொடரும் முற்றுப்புள்ளி இல்லா பொதுவாழ்வின் அடையாளமே பழ. நெடுமாறன்.

இவர்களைப் போன்ற பெரிய அடையாளங்களைத் தாண்டி தமிழகத்தின் குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை 80 வயதைக் தொட்டும் உமர் முக்தார் போல போர்க் குணத்துடன் முற்றுப் புள்ளி இல்லா பொதுவாழ்வின் அடையாளத் தலைவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காந்திய நெறிகளின் மீது பற்று கொண்டிருந்த குடும்ப வாரிசுகள், அரசியல் பயணத்து முற்றுப்புள்ளி இல்லாத முகங்களாக இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளிப் பனி மலையின் மீதுலவு வோம்; அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று முழங்கிய மகாகவி பாரதிக்கும், 'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று அஹிம்சைக்கு யுத்தப் படை திரட்டிய நாமக்கல் கவிஞருக்கும் வரலாற்றில் ஏது முற்றுப்புள்ளி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.