கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

அகமதாபாத் பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நாட்டுக்கு வெளியிலிருந்து வரும் மின்னஞ்சல்
கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?
-

சென்னையில் பள்ளிகள், நாடு முழுவதுமிருக்கும் பல்வேறு விமான நிலையங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அகமதாபாத்தில் உள்ள மிகப் பெரிய 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் உடனடியாக காவல்துறையினரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் பள்ளிகளுக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். சோதனையின் நிறைவில் அது புரளி என்று உறுதிசெய்யப்பட்டது.

இது குறித்து சைபர் குற்றவியல் துறை காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த மின்னஞ்சல் வந்த கணினி முகவரி இந்தியாவுக்கு வெளியே இருந்து வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த வாரம் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மின்னஞ்சல் ரஷிய மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் மெயில்.ஆர்யு வழியாக வந்திருப்பதை சைபர் குற்றவியல் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்டர்போல் உதவியை நாடி, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை கண்டுபிடிக்குமாறு காவல்துறையினர் சிபிஐ அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தில்லிக்கு வந்த மின்னஞ்சல் sawariim@mail.ru என்ற முகவரியிலிருந்து வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தனது அடையாளத்தை மறைக்க, இந்த நபர் விபிஎன் சேவையை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு தெற்கு தில்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இதே மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகவரியிலிருந்து வந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தில்லி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com