பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப்பதிவு தரவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின், வாக்கு நிலவரத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து, சரத் பவாருக்கு எழுதிய கடிதத்தில் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்கே எழுதியுள்ள கடிதத்தில், "மக்களவைத் தேர்தலுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிலவரத்தை ஏப்ரல் 30-ஆம் தேதியன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 11 நாள்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 4 நாள்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதான் தேர்தல் ஆணையத்திடம் எங்களின் முதல் கேள்வி - வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது ஏன்? தாமதமாக வெளியிடப்பட்டது தொடர்பாக எவ்வித விளக்கமும் அளிக்காதது ஏன்?" என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குப்பதிவு தரவுகளில் உள்ள முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே. அதில், "102 இடங்களுக்கு நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவன்று, இரவு 7 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு நிலவரம் சுமார் 60% என்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் (88 இடங்கள்), 60.96% வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.

ஏப். 20 அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நிலவரம் 65.5% என்றும், ஏப். 27 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம் 66.71% தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இறுதியாக ஏப். 30 அன்று, முதல் கட்டத்திற்கு 66.14% வாக்குகள் பதிவானதாகவும், இரண்டாம் கட்டத்திற்கு 66.71% வாக்குகள் பதிவானதாகவும் தெரிவித்தது.

கோப்புப்படம்
மே 7: மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னும், வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் தாமதத்திற்கு இடையே 5.5% வாக்கு சதவிகிதம் அதிகரித்தது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

”ஜனநாயகத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டைப் பாதுகாப்பது குறித்தும், முரண்பாடுகளுக்கு எதிராக ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்” என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

”முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிலவரத்தால், பிரதமர் மோடி மற்றும் பாஜகவினருக்கு ஏற்படும் பின்னடைவை தெரிந்து அவர்கள் விரக்தியில் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்

தங்களது பதவியை தக்கவைத்துக் கொள்ள அதிகார போதையில் இருக்கும் எதேச்சதிகார ஆட்சியாளர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும்.” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com