
கோடைகாலத்தின் முதல் மழையை எதிர்கொள்கிற மும்பை மாநகரத்தில் புழுதிப் புயலும் சேர்ந்ததால் பல்வேறு இடங்களில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மக்கள் காயமுற்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
தாதர், குர்லா, மாஹிம், காட்கோபர், முலுந்த் மற்றும் விக்ரோலி ஆகிய பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் வீசியது. தெற்கு மும்பை பகுதிகளில் தூறல் இருந்தது. சாட்டிலைட் நகரங்கள் தானே, அம்பர்நாத் ஆகிய பகுதிகள் மிதமான மழையை எதிர்கொண்டன.
காட்கோபர் பகுதியில் விளம்பர பதாகை விழுந்ததில், குறைந்தது 35 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 100-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பன்னடுக்கு கார் நிறுத்தகத்தில் உள்ள மின்தூக்கி சேதமடைந்ததில் பலர் காயமுற்றுள்ளனர். மீட்புப் படை வீரர்கள் மற்றும் காவலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பார்வைத்திறன் குறைந்த சூழலால் மும்பையில் தரையிறங்கும் விமானங்கள் திருப்பப்பட்டன.
இந்திய வானிலை மையம் அடுத்த 3-4 மணி நேரங்களுக்கு தானே மற்றும் சதரா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அநாவசியமாக வெளியே வரவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவம் தவறி பெய்கிற மழை வெப்பம் அதிகரிக்கும் சூழலில் சிறிது ஆறுதல் அளித்தாலும் தானே மாவட்டத்தில் பல இடங்களில் மின்சார நிறுத்தத்துக்குக் காரணமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.