மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்!
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினருக்காக அரசு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை ஒதுக்க விரும்பியதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை குற்றம் சாட்டினார். மேலும், மதத்தின் அடிப்படையில் வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

வடக்கு மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள பிம்பால்கான் பஸ்வந்த் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மஹாயுதி வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பாரதி பவார் (பாஜக), ஹேமந்த் கோட்சே (சிவசேனா) ஆகியோரை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது:

பட்ஜெட்டை மத அடிப்படையில் பிரிப்பது ஆபத்தானது.

அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், வேலை மற்றும் கல்வியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உறுதியாக இருந்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க திட்டம் தீட்டினர்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக எதிர்த்தது. ஆனால், அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறது.

அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர். ஆனால், காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி, ஓபிசிகளின் இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகிறது.

மக்களவைத் தேர்தல், நாட்டு நலனுக்காக வலுவான முடிவுகளை எடுக்கும் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கானது.

கடந்த 10 ஆண்டுகளில், மத வேறுபாடின்றி இலவச ரேஷன், குடிநீர், மின்சாரம், வீடுகள் மற்றும் எரிவாயு இணைப்புகளை எனது அரசு வழங்கியுள்ளது என்றார் பிரதமர் மோடி.

சரத் பவாரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், மகாராஷ்டிரத்தை சேர்ந்த இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவருக்கு, காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைவது தெரியும்.

எனவே, சிறிய கட்சிகளை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com