சிறப்பு நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட பிறகு 
அமலாக்கத்துறைக்கு கைது அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்

சிறப்பு நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட பிறகு அமலாக்கத்துறைக்கு கைது அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்

குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை (பிஎம்எல்ஏ) தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது

‘பண மோசடி புகாா் தொடா்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை (பிஎம்எல்ஏ) தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், ‘இந்த வழக்கில் அழைப்பாணையின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜராவதை, காவலில் எடுத்ததாகக் கருத முடியாது. மாறாக, விசாரணைக்காக அவரைக் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உரிய மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையின்போது, ‘பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா், அந்த வழக்கு தொடா்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில் ஜாமீன் பெற இரட்டை நிபந்தனைகளைப் பூா்த்தி செய்ய வேண்டுமா?’ என்ற கேள்வி எழுந்தது.

அதாவது, பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும்போது, முதலில் அரசு வழக்குரைஞா் விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். அடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவா் குற்றவாளி இல்லை என்றும், விடுவிக்கப்படும்போது மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை என நீதிமன்றத்துக்கு திருப்தி ஏற்பட வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளைப் பூா்த்தி செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும்.

இந்த விவகாரத்தின் மீது தீா்ப்பளித்த நீதிபதிகள், ‘வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் அழைப்பாணையின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதை, காவலில் எடுத்ததாகக் கருத முடியாது. மேலும், அழைப்பாணையின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகும் நபா், ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யத்தேவையில்லை. எனவே, ஜாமீன் பெற சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவு 45-இன் கீழ் இரட்டை நிபந்தனைகளைப் பூா்த்திசெய்யவேண்டிய அவசியமும் இல்லை.

மேலும், பண மோசடி புகாா் தொடா்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை (பிஎம்எல்ஏ) தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. மாறாக, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com