
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆம் ஆத்மி எம்.பி.ஸ்வாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று முதல்வர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியகாக மாலிவால் காவல் நிலையத்தில் எப்ஃஐஆர் பதிவு செய்தார். அதன் பின்னர், பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தில்லி காவல்துறை வியாழனன்று மாலிவாலிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது தனக்கு நடந்த கொடுமைகளைக் காவல் துறையிடம் அவர் விளக்கினார்.
முதல்வரைச் சந்திக்கக் காத்திருப்பு அறையிலிருந்த என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசிய அவா், என் முன்வந்து என்னை 7-8 முறை அறைந்தாா். என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நான் தொடா்ந்து கூச்சலிட்டேன். அந்த நேரத்தில், என் சட்டையை மேலே இழுத்தார். நான் தொடா்ந்து உதவிக்காக கத்திக் கொண்டிருந்தேன். ஆனால், யாரும் வரவில்லை. என் மாா்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் பலமுறை அவா் என்னைத் தாக்கினார். மாதவிடாய் காலத்தில் இருந்த நான், தாங்க முடியாத வலியில் என்னை விட்டுங்கள் என்று துடித்தேன் என்று கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்தார். முதல்வரின் இல்லத்தில் தான் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இந்த நிலையில், ஸ்வாதி மாலிவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சோதனையில் மாலிவாலின் இடது காலில் 3 செ.மீ அளவுக்கும், வலது கன்னத்தில் 2 செ.மீ அளவுக்கு அடித்த காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.