

பிபவ் குமார் விவகாரத்தில் தில்லி காவல் துறை தொடர்ந்து பொய்களைக் கூறிவருவது ஏன்? என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் நீர்வளத் துறை அமைச்சருமான செளரப் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அவரை சந்திப்பதற்காக காத்திருந்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை முதல்வரின் தனிச் செயலர் பிபவ் குமார் கடுமையாகத் திட்டித் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஸ்வாதி மாலிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. தில்லி முதல்வர் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்த பிறகு பிபவ் குமாரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கரணமாக தில்லி பாஜக தலைமை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கெஜ்ரிவால் தலைமையில் தடை உத்தரவையும் மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தில்லி காவல் துறை கைது செய்தது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் செளரப் பரத்வாஜ், ''பிபவ் குமார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் லக்னெளவில் இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவர் (பிபவ் குமார்) தலைமறைவானது போன்று தில்லி காவல் துறை செய்தியை பரப்புகிறது. அவரை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பாஜகவின் சதிச்செயலால் இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் தீவிரத்தை அதிகரித்து வந்தது தில்லி காவல் துறை.
முதல்வர் இல்லத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் காணவில்லை என மற்றொரு பொய்யை காவல் துறை பரப்பியது. ஆனால், முதல்வர் இல்லத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை டிவிஆர் உடன் எடுத்துச் சென்றது காவல்துறைதான். ஆனால் தில்லி காவல் துறை இந்த விவகாரத்தில் தொடர்ந்து பொய்களைப் பரப்புவது ஏன்?'' என செளரப் கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.