போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

விபத்துக்கு காரணமான சிறுவனை காப்பாற்ற காவல்துறையினர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு.
அஷ்வினி கோஸ்டா, அனிஸ் அவதியா
அஷ்வினி கோஸ்டா, அனிஸ் அவதியா

புணேவில் மதுபோதையில் கார் ஓட்டிய சிறுவன் மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

புணே கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் பைக் மீது சொகுசு கார் மோதியதில், ஐ.டி. ஊழியர்கள் அனிஸ் அவதியா(24) மற்றும் அஷ்வினி கோஸ்டா(24) ஆகியோர் உயிரிழந்தனர்.

காவல்துறை விசாரணையில் சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்துக்கு முன்னதாக சனிக்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து 12 மணிவரை ஒரு பாரிலும், நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிவரை மற்றொரு பாரிலும் சிறுவன் மது அருந்தியது தெரியவந்துள்ளது.

அஷ்வினி கோஸ்டா, அனிஸ் அவதியா
மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

இதையடுத்து அந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது.

சாலை விபத்து குறித்து 300 பக்க கட்டுரை, சிறுவருக்கு ஆலோசனை என மிக எளிய நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைதான சிறுவனுக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக பிரியாணி, பர்கர், பீசா என வகைவகையான உணவுகளை காவல்துறையினர் வாங்கிக் கொடுத்த விடியோக்களும் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஊடகவியலாளர் செளரப் கோரட்கர் கடும் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “இது விபத்து அல்ல. ஊழல் செய்யும் காவல்துறை, நிர்வாகம், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பதிவு செய்யாத காரை வழங்கிய கார் கம்பெனி உள்ளிட்டோர் செய்த கொலை.

சரியான நேரத்தில் பார்கள் மூடியிருந்தால், விதிப்படி சிறுவனுக்கு மது வழங்காமல் இருந்திருந்தால், பெற்றோர்கள் கார் வழங்காமல் இருந்திருந்தால், போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இருவர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

தலைக்கவசம் அணியவில்லை என்றாலும், ஓட்டுநர் உரிமம் இல்லையென்றாலும் உடனடியாக அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை ஏன் பதிவு எண் இல்லாத கார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இரண்டு குடும்பங்களை அழித்தவருக்கு காவல்துறையினர் வகைவகையான உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கிறது.

பள்ளிகளில் தவறு செய்யும் சிறுவர்களுக்குகூட இதைவிட கடும் தண்டனைகள் வழங்கப்படும்.

உரிமம் இல்லாமல் ஓட்டியதற்கு 3 மாதம் சிறை, 18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டியதற்கு 3 மாதம் சிறை, மது அருந்தி ஓட்டியதற்கு 6 மாதம் சிறை, அதிவேகமாக இயக்கியதற்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கும் நீதிமன்றம், இருவரை கொன்றவருக்கு 15 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது.

இவற்றையெல்லாம்விட குற்றத்தை மறைக்க எம்எல்ஏ சுனில் டிங்ரே, சாட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. உண்மையென்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது, “காவல்துறை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் குற்றவாளியை காப்பாற்ற நினைக்கிறார். இருவரை கொன்றவருக்கு 2 மணிநேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. காணொளியில் அவர் போதையில் இருப்பது தெரிகிறது, ஆனால் பரிசோதனையில் எதிர்மறையாக உள்ளது. குற்றவாளிகளை யார் காப்பாற்றுகிறார்கள்? காவல் ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அல்லது புணே மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், 48 மணி நேரத்துக்கு பிறகு சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வால், இரு பார்களின் உரிமையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com