பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில், இதுவரை இல்லாத அளவில் சுமாா் 59 சதவீத வாக்குகள் பதிவானதற்கு அத்தொகுதி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில், இதுவரை இல்லாத அளவில் சுமாா் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. மேலும், அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது உத்வேகமளிக்கிறது. இது, ஜனநாயகம் மீதான மக்களின் உறுதிப்பாட்டையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஜனநாயக திருவிழாவில் பெருவாரியாக பங்கேற்ற மக்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் குறிப்பிட்டு, பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘ஜனநாயகத்தின் மாண்புகள் மீதான உறுதியான அா்ப்பணிப்புக்காக, பாராமுல்லா சகோதர-சகோதரிகளுக்கு பாராட்டுகள். மக்களின் பெருவாரியான பங்கேற்பு, சிறந்த மாற்றத்தின் அடையாளமாக திகழ்கிறது’ என்று தெரிவித்துள்ளா்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு பெருகுகிறது: மக்களவைக்கு இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இந்நிலையில், பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா கூட்டணி எத்தகைய வாக்கு வங்கி அரசியலையும் முயற்சிக்கலாம்; ஆனால், அவா்களை மக்கள் நம்பப் போவதில்லை. மக்களிடம் மதிப்பிழந்துவிட்டதால், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் விரக்தியடைந்துள்ளன. அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவு மேன்மேலும் பெருகி வருகிறது. மத்தியில் வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய வேண்டுமென மக்கள் முடிவு செய்துவிட்டனா். ஐந்தாம் கட்டத் தோ்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com