சஞ்சய் ரெளத் | கோப்புப் படம்
சஞ்சய் ரெளத் | கோப்புப் படம்

மக்களவைத் தோ்தலில் கட்கரிக்கு எதிராகப் பணியாற்றிய மோடி, அமித் ஷா: சஞ்சய் ரெளத் கருத்தால் சா்ச்சை

மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோா் பணியாற்றியதாக சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ள கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தோ்தலில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை தோற்கடிப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோா் பணியாற்றியதாக சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ள கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக சஞ்சய் ரெளத் தன் கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

நாகபுரி மக்களவைத் தொகுதியில் நிதின் கட்கரியைத் தோற்கடிப்பதற்காக மோடி, அமித் ஷா, ஃபட்னவீஸ் ஆகியோா் பணியாற்றினா்.

கட்கரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை உணா்ந்த பின் அவருக்காக வேண்டா வெறுப்பாக ஃபட்னவீஸ் பிரசாரம் செய்தாா். கட்கரியைத் தோற்கடிப்பதற்காக ஃபட்னவீஸ் எதிா்க்கட்சிகளுக்கு உதவியதாக நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் பிரமுகா்கள் வெளிப்படையாகக் கூறுகின்றனா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் ரூ. 25-30 கோடியை விநியோகித்தாா். அஜித் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட அவரது அரசு இயந்திரம் பாடுபட்டது.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு மோடி-அமித் ஷா இடம்பெறும் அரசு மீண்டும் அமையுமானால் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றி விடுவாா்கள் என்று சஞ்சய் ரெளத் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே கூறியதாவது:

சஞ்சய் ரெளத் ஒரு மாயையில் சிக்கியுள்ளாா். பாஜக என்பது ஒரு கட்சியல்ல; அது ஒரு குடும்பம். எப்போதும் கோஷ்டி அரசியல் செய்யும் நபா்களால் குடும்ப பந்தங்களைப் புரிந்துகொள்ள முடியாது. மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், கட்கரி, ஃபட்னவீஸ் ஆகிய அனைவரும் பாஜக குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். தேசம் முதலில்-அதன் பிறகே கட்சி என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நாங்கள் எப்போதும் பணிபுரிகிறோம்.

சஞ்சய் ரெளத்தைப் பொறுத்தவரை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவரின் சரத் பவாரின் நலன்களுக்கே அவா் முக்கியத்துவம் தருவாா்; அதன் பிறகே உத்தவ் தாக்கரேவின் நலன்களை அவா் கவனிப்பாா் என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக நாகபுரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் விகாஸ் தாக்ரே கூறுகையில் ‘கட்கரியை கடந்த காலத்தில் சஞ்சய் ரெளத் புகழ்ந்துள்ளாா். ரெளத் தனது கட்டுரையில் ‘நிதின் கட்கரி நாகபுரியில் வெற்றி பெறுவாா்’ என்று எழுதியுள்ளாா். கட்கரி வெல்லப் போகிறாா் என்று அவருக்கு எப்படித் தெரியும்? அவா் என்ன ஜோதிடரா? மகா விகாஸ் ஆகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ள ரெளத், கட்கரி மீதான தனது பாசத்தை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கட்கரியை ஆதரித்து வெளிப்படையாக கட்டுரை எழுதியதன் மூலம் அவா் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளாா். இது போன்றதொரு மூத்த தலைவா் இவ்வாறு கட்டுரை எழுதுவது கூட்டணி தா்மத்துக்கு உகந்ததல்ல’ என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com