
உத்தரப் பிரதேசத்தில் தேர்வு வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் மீது பாஜகவின் 'புல்டோசர்' பாயதது ஏன்? என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பான்ஸ்கான் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் ஈடுட்டார். அப்போது பாஜகவை விமர்சித்து அவர் பேசியதாவது,
''இது ஜனநாயகத்தைக் காப்பதற்கானத் தேர்தல். இதனைக் காப்பவர்கள் பக்கம் மக்கள் நிற்க வேண்டும். ஜுன் 4ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் அளவு அதிகரிக்கப்படும். மேலும், பொருள்கள் குறித்த விவரங்கள் தரவுகளாக செல்போன் எண்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைவாய்ப்பையும் இடஒதுக்கீட்டையும் உறுதிசெய்யும் வழக்கத்தையே ஒழித்துவிட்டனர். இடஒதுக்கீட்டின்படி அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். அக்னிபத் திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
குஷி நகரில் சமாஜவாதி வேட்பாளர் அஜய் பிரதாப் சிங் தலைமையில் தேர்தல் ஆலோசனை நடைபெற்றது. இதில், கேள்வித் தாள் கசிந்தவர்களுக்கு எதிராக செயல்பட்டதற்காக பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களின் புல்டோசர் எப்போதுமே தயாராக இருக்கும். ஆனால், கேள்வித்தாள் கசிந்தவர்களுக்கு எதிரானவர்களை நோக்கிச் செல்லும்போது மட்டும் அதன் சாவி தொலைந்துவிடும். ஜனநாயகத்தை மாற்றத் துடிப்பவர்களை மக்கள் மாற்றிவிடுவார்கள்.
இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்தது பாஜக. சந்தையில் எல்லா பொருள்களும் அதிக விலைக்கு கிடைத்தாலும், விவசாயிகளின் வருவாய் இன்னும் இரட்டைப்பாகவில்லை. இந்த சூழலுக்கு யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும். விரைவில் அவர்கள் கைகளிலிலிருந்து நாடு விடுவிக்கப்படும்'' என அகிலேஷ் யாதவ் பேசினார்.
ஜுன் 1ஆம் தேதி மக்களவைக்கான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி, கோரக்பூர், மஹாராஜ்கஞ்ச், குஷிநகர், தோரியா, பான்ஸ்கான் (தனித்தொகுதி), கோஷி, பாலியா, சாந்துலி, மிர்சாபூர் மற்றும் ரோபர்ட்ஸ்கஞ்ச் (தனித்தொகுதி) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.