வாரணாசி தேர்தல் இந்தியாவின் வளர்ச்சிக்கானது.. பிரதமர் மோடியின் வேண்டுகோள் என்ன?

கடைசிக்கட்ட தேர்தலில் வாரணாசி வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி படம் | பிடிஐ

மக்களவைத் தேர்தல், நவகாசிக்கான வளர்ச்சிக்கு மட்டுமல்ல, புதிய இந்தியாவுக்கான வளர்ச்சியை உண்டாக்கும் தேர்தல் என வாரணாசி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் 7 ஆவது கட்டத்துக்கு முன்னதாக, வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள விடியோ பதிவில், காசி நகரம் வாய்ப்புகளின் பூமியாக மாறியுள்ளது என்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ''என்னைப் பொறுத்தவரை, காசி என்பது பக்தி, சக்தி, துறவுக்கான நகரம். காசி உலகின் கலாசார தலைநகரம், இசையின் பூமி. இந்த நகரத்தின் பிரதிநிதியாக இருப்பது காசி விஸ்வநாதரின் அபரிமிதமான அருளாலும், காசி மக்களின் ஆசீர்வாதத்தாலும் மட்டுமே சாத்தியம். வரவிருக்கும் தேர்தல் வாரணாசிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் முக்கியமான தருணம். இம்முறை காசிக்கான தேர்தல், 'நவகாசி' மட்டுமின்றி, இந்தியாவுக்கான வளர்ச்சியை உருவாக்கும் தேர்தல். காசி மக்கள் ஜூன் 1ம் தேதி புதிய சாதனை படைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் காசி நகரம் இளைஞர் நலன் மற்றும் வளர்ச்சியின் தலைநகராக மாறியுள்ளது.

நான் வேட்புமனுத் தாக்கல் செய்த அன்று காசி இளைஞர்களின் மத்தியில் உற்சாகத்தை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இதேபோன்ற உற்சாகத்தை வாக்குப்பதிவு நாளில் பார்ப்பேன் என்று நம்புகிறேன். காசி மக்களின் ஒவ்வொரு ஓட்டும் எனக்குப் பலத்தைக் கூட்டி, புதிய ஆற்றலை அளிக்கும்” என்றும் அந்த விடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

வாரணாசியில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்டத்தில் பிரதமர் மோடிக்கும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்க்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அத்தர் ஜமால் லாரி போட்டியிடுகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான வாரணாசி தொகுதியில் ரோஹானியா, வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கான்ட், சேவாபுரி ஆகிய ஐந்து சட்டபேரவைத் தொகுதிகளும் அடங்கும்.

பிரதமரும், தற்போதைய வாரணாசி தொகுதி எம்பியுமான மோடி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் முனைப்பில் களத்தில் உள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் 6,74,664 வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தார். இது அங்கு பதிவான மொத்த வாக்குகளில் 63.3 சதவீதமாகும்.

2014 இல் வாரணாசி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி அங்கு பதிவான மொத்த வாக்குகளில் 56.37 சதவீதத்தைப் பெற்று, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி
பகவதியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் 20.30 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் ராய் 7.34 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 62 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களையும், அகிலேஷ் யாதவின் சாமஜ்வாதி 5 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலின் கடைசிகட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com