
பெங்களூரு: கர்நாடகத்தில் நடைபெற்றும் காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதற்காக கேரளாவில் உள்ள “தந்திரிகள்” மூலம் தனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் எதிராக மாந்திரீகம் செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''என்னையும், முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில அரசையும் குறிவைத்து, கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் விலங்குகளை பலியிடும் “சத்ரு பைரவி யாகம்” என்ற சடங்கு நடத்தப்படுள்ளது.
கர்நாடத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதற்காக கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் மாந்திரீகம் செய்யப்பட்டு உள்ளது. ‘ராஜகண்டக’, ‘மரண மோகன ஸ்தம்பன’ யாகங்களை நடத்தியுள்ளார்கள். இது தொடர்பான நம்பத்தகுந்த தகவல் தன்னிடம் இருப்பதாகவும், கேரளாவில் நடத்தப்படும் மாந்திரீக சடங்குகளுக்கு, யாகங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் அது குறித்த தகவல்களை அளித்திருப்பதாக சிவக்குமார் கூறினார்.
நான் ஒரு விசுவாசி என்றும், மக்களின் ஆசீர்வாதம் என்னையும் சித்தராமையாவையும் பாதுகாக்கும். "இந்த யாகங்கள் அகோரிகளால் நடத்தப்பட்டன, மேலும், 'பஞ்ச பலி' (ஐந்து யாகங்கள்) சடங்குகள் செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதற்காக 21 ஆடுகள், மூன்று எருமைகள், 21 கருப்பு ஆடுகள், ஐந்து பன்றிகள் பலியிடப்பட்டுள்ளன. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாம் நம்பும் சக்திகள் நம்மைக் காக்கும். கர்நாடத்தில் உள்ள சில அரசியல் நபர்கள் அதைச் செய்து வருகின்றனர்.
“இந்த யாகங்களை யார் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். யாருடைய பெயரையும் வெளியிட விரும்பவில்லை. அவர்கள் எதை வேண்டுமானலும் செய்யட்டும். நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன். மாந்திரீகத்தை நான் நம்புவதில்லை” என்று கூறினார்.
அதை முறியடிப்பதற்கு நீங்கள் ஏதேனும் பூஜை அல்லது சடங்குகளைச் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எனக்கு கடவுள் மற்றும் மக்களின் ஆசீர்வாதங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன் கடவுளின் கை கூப்பி ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தொடங்குகிறேன். அதனால்தான் எனக்கு இவ்வளவு வலிமையும் பாதுகாப்பும் இருக்கிறது'' என்று சிவக்குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.