
‘சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக சதி செய்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது கனடா அமைச்சா் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது; இது இரு நாட்டு உறவுக்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும்’ என்று இந்தியா எச்சரித்துள்ளது.
கனடாவுக்குள் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவு சேகரிப்புப் பணிகளுக்கு அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டதாக அந்த நாட்டு வெளியுறவு இணையமைச்சா் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டிய நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
உறவில் விரிசல் ஏன்?: இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கடந்த ஆண்டு ஜூனில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கிருப்பதாக அந்த நாட்டு பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசியது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
கனடா தூதா் வெளியேற்றம்: தொடா்ந்து, நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா மற்றும் சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடா குற்றஞ்சாட்டியது. மேலும், கனடாவில் கொலைச் சம்பவங்கள் உள்பட பரவலாக நடைபெறும் வன்முறையில் இந்திய உளவாளிகளுக்குப் பங்குள்ளதாகவும், இது கனடாவின் பொதுப் பாதுகாப்புக்கு பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது.
துரோகம்: இந்தக் குற்றச்சாட்டால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்த நாட்டின் ஐந்து தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டது. கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் ஐந்து தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு கனடா துரோகம் செய்துவிட்டதாக தாயகம் திரும்பிய சஞ்சய் வா்மா கூறினாா்.
அமித் ஷா மீது குற்றச்சாட்டு: இந்த சூழலில், கனடா நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினா்களிடம், அமித் ஷா மீதான குற்றச்சாட்டை மோரிசன் தெரிவித்ததாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது.
இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் கேள்விக்குப் பதிலளித்த செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘இந்தியாவை இழிவுபடுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக சா்வதேச ஊடகங்களுக்கு வேண்டுமென்றே ஆதாரமற்ற செய்திகளை கனடா அரசு உயா் அதிகாரிகள் வெளியிடுவது, அந்த நாட்டின் அரசியல் திட்டங்கள் மற்றும் நடத்தை குறித்த இந்தியாவின் நீண்டகால கருத்தை உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இரு தரப்பு உறவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கனடா ரகசிய கண்காணிப்பு: கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அந்த நாட்டு அரசு ரகசியமாக கண்காணித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தூதரக அதிகாரிகளின் தொலைத்தொடா்பு சாதனங்களை இடைமறித்து உளவு பாா்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள்மூலம் ராஜீய, தூதரக ஒப்பந்தங்கள் மீறப்படுவதால் கனடா அரசுக்கு முறையாக எதிா்ப்பு தெரிவித்துள்ளோம். தொழில்நுட்பத்தைச் சுட்டிக்காட்டி கனடா அரசு தங்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.
இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்கெனவே வன்முறைச் சூழலில் பணியாற்றிவரும் நிலையில், கனடா அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை இன்னும் மோசமாக்கும்’ என்றாா்.
கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன்
மத்திய உள்துறை அமைச்சா் மீது கனடா இணையமைச்சா் சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லியில் உள்ள அந்த நாட்டு தூதரக பிரதிநிதியை வெள்ளிக்கிழமை வரவழைத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று வெளியுறவு செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.
கனடாவின் சைபா் அச்சுறுத்தல்: நாடுகள் பட்டியலில் இந்தியா
இணையவழி (சைபா்) அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவை முதன்முறையாக கனடா சோ்த்துள்ளது.
இந்தியா-கனடா இடையிலான ராஜீய மோதல்களுக்குஇ இடையே, கனடாவின் நிகழாண்டு தேசிய இணையவழி அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் சீனா, ரஷியா, ஈரான், வட கொரியாவுக்கு அடுத்து 5-ஆவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசால் ஆதரிக்கப்படும் அமைப்புகள் உளவு நோக்கத்துக்காக கனடா அரசுக்கு எதிராக இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2018, 2020 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய இணையவழி அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.