ஆபத்தான நிலையில் தில்லி? காற்றின் தரம் கவலைக்கிடம்!

காற்றின் தரம் கடுமையான நிலையில் இருப்பதால் பலர் சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் பாதிப்பு
தில்லி: தீபாவளிக்குப் பிறகு உச்சமடைந்த காற்று மாசு
தில்லி: தீபாவளிக்குப் பிறகு உச்சமடைந்த காற்று மாசுகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தைத் தொடர்ந்து, தில்லியில் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமையில் (நவ. 3) காற்றின் தரக் குறியீடு 400ஐ தாண்டியதால், ஆபத்தான நிலையில் தில்லி இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு பகுதியில் காற்றின் தரக் குறியீடு 200 முதல் 300 வரையில் இருந்தால், அப்பகுதி மோசமான நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. தரக் குறியீடு 301 முதல் 400 வரையில் இருப்பின், மிக மோசமான நிலையாகக் கருதப்படுகிறது. 401 முதல் 450 வரையில் கடுமையானதாகவும், 450-க்கு மேல் சென்றால் மிகக் கடுமையானதாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமை (நவ. 2) இரவு 9 மணியளவில் 327-ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு, 12 மணிநேரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் 447 ஆக உயர்ந்தது.

குறிப்பாக அலிபூர், ஆனந்த் விஹார், அசோக் விஹார், ஆயா நகர், பவானா, புராரி, மதுரா சாலை, ஐஜிஐ விமான நிலையம், துவாரகா, ஜஹாங்கீர்புரி, முண்ட்கா, நரேலா, பட்பர்கஞ்ச், ரோகினி, ஷாதிபூர், சோனியா விஹார், வஜீர்பூர், மந்திர் மார்க், நேரு நகர், நஜாஃப்கர் முதலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலி தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, தீபாவளி கொண்டாட்டங்களால் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 21,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததாவது, அவர்களில் 69 சதவிகிதம் பேர் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு உறுப்பினராவது தொண்டைப் புண், இருமல் போன்ற சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 62 சதவிகிதம் பேர் மோசமான காற்றின் தரம் காரணமாக கண் எரிச்சலை அனுபவித்ததாகவும் கூறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) காலை 9 மணி நிலவரப்படி தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு

ஆனந்த் விஹார் - 532

அலிபூர் - 318

பஞ்சாபி பாக் - 381

நரேலா - 295

ஆர்.கே.புரம் - 329

பாவனா - 382

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.