ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வயது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணியாக போட்டியிடுகின்றன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தன்னுடைய வயது 49 எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் கடந்த 2019 தேர்தலில் போட்டிடும்போது அந்த ஆண்டு டிச. 12 ஆம் தேதி தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது 42 எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் தற்போது அவரது வயது 47 என இருக்க வேண்டும்.
ஆனால், இந்த மாதம் நடக்கவுள்ள தேர்தலில் 49 எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்கள் இருந்தால் மனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வங்கிக் கடன்! பெற்ற மகனை ரூ. 9,000-க்கு விற்ற தாய்!
இந்நிலையில் பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஹேமந்த் சோரன் தவறான தகவல் அளித்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் தீபக் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
ஹேமந்த் சோரன் வயது குறித்து சரிபார்க்க வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கூறியுள்ளது.
அதேநேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தித் தொடர்பாளர் மனோஜ் பாண்டே, இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஹேமந்த் சோரன் வயது குறித்து பாஜகவினர் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்று ராஞ்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹேமந்த் சோரன், தான் பிறந்த தேதி குறித்த உண்மையை மக்களிடம் கூறுவது அவரது தார்மீக பொறுப்பு' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பர்ஹைத் தனித் தொகுதியின் தேர்தல் அதிகாரி கெளதம் பகத் கூறுகையில், 'ஹேமந்த் சோரன் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அவரது பிறந்த தேதியும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களில் உள்ள தேதியும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுவிட்டது.
2019 ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் முரண்பாடுகள் பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல' என்று கூறியுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிகுமார் கூறுகையில், 'தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சுருக்கமான விசாரணையின் அடிப்படையில் வேட்பாளர்களின் மனுவை ஏற்கின்றனர். முரண்பாடுகள் இருந்தால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்' என்றார்.
இதனால் தற்போதைய தேர்தலில் ஹேமந்த் சோரன் போட்டியிடுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றே தெரிகிறது.