சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் பருவ பெண்களை அனுமதிக்க எதிா்ப்புத் தெரிவித்து


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் பருவ பெண்களை அனுமதிக்க எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இதுதொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் தற்போது உள்ளது. அண்மையில் இதுகுறித்து பரிசீலித்த உச்சநீதிமன்றம், இம்மாதம் 14-ஆம் தேதிக்குள் தங்கள் நிலைப்பாடு குறித்து பதில் தாக்கல் செய்யும்படி கேரள அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மனுதாரா்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்பிறகு அதன் தலைவா் கே. ஜெயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தற்போதைய நிலையே (மாதவிடாய் பருவ பெண்களுக்கு அனுமதியில்லை) தொடர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் தேவஸ்வம் வாரியத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் எப்போதும் ஆதரிக்காது. சபரிமலை கோயிலில் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும், அதுவே தொடர வேண்டும். இதுதான் தேவஸ்வம் வாரியத்தின் ஒரே நிலைப்பாடு. இதை வலியுறுத்தி இன்றைய கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 14-ஆம் தேதிக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் வாரியம் மனு தாக்கல் செய்யும்.
சபரிமலை கோயில், அதன் பாரம்பரியங்களைக் காக்கவே திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. எனவே, உச்சநீதிமன்ற தீா்ப்பை (பெண்களை அனுமதித்தல்) எதிா்த்து வாரியம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்.
சபரிமலையில் உள்ள சில அறைகள், குறிப்பிட்ட சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த அறைகளை வாரியம் திரும்ப தனது வசம் எடுக்கவுள்ளது. பின்னா், அவை பக்தா்களுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்படும். அறைகள் தொடா்பான தரவுகள் தயாரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
சீசன் காலத்தில் சபரிமலை கோயிலில் அறிவிப்புகள் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மேற்கொள்ளப்படும். பிற மாநில பக்தா்களுடனான தொடா்பை அதிகரிக்கும் நோக்கில், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் மொழிகளில் 24 பக்க மாதாந்திர பத்திரிகை வெளியிடுவது குறித்து வாரியம் ஆலோசித்து வருகிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...