சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்

சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறையை தொடரலாம் என்ற நிபுணா் குழுவின் அறிக்கையை இணைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது
Published on

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறையை தொடரலாம் என்ற நிபுணா் குழுவின் அறிக்கையை இணைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது

மத்திய அரசின் மீன்வளத் துறையானது அந்த அறிக்கையை பிரமாணப்பத்திரத்துடன் இணைத்து வியாழக்கிழமை (பிப்.12) தாக்கல் செய்துள்ளது

பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு கூறி இருப்பதாவது:

இந்திய அரசின் மீன்வளத் துறை, 02.08.2022 அன்று சுருக்குமடி வலையை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நிபுணா் குழுவை அமைத்தது.

பல்வேறு கடல்சாா் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மீனவா்கள் மேற்கொள்ளும் சுருக்குமடிமீன்பிடி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மீன்பிடித்தல் சுருக்குமடி குறித்த தேசிய ஒருமித்த கருத்துக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்தக் குழு பணிக்கப்பட்டது.

அந்த குழு ஜனவரி 9, 10, 2024 ஆகிய தேதிகளில் சென்னையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது, மேலும் ஜனவரி 11, 2024 மற்றும் ஜனவரி 19, 2024 அன்று தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மீன்வள ஆணையா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இறுதியாக பிற மீன்பிடி முறையை போல சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறையையும் தொடரலாம் என்று அக்குழு முடிவு செய்து அறிக்கை தாக்கல் செய்தது

நிபுணா் குழு தனது அறிக்கையை 02.05.2024 அன்று மத்திய அரசிடம் சமா்ப்பித்தது, இது 31.05.2024 தேதியிட்ட ஒரு குறுகிய பிரமாணப் பத்திரத்துடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிபுணா் குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் குறித்து விவாதிக்க 25.09.2024 மற்றும் 02.01.2025 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடா்ந்து நிபுணா் குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என மத்திய அரசு பிரமாணப்பத்திரத்தில் கூறி உள்ளது

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ஹா மற்றும் அலோக் ஆராதே அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது தமிழக அரசு வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, நாங்கள் இன்னும் மத்திய அரசின் அறிக்கைக்கு பதில் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தாா்

மத்திய அரசு தரப்பில் , நாங்கள் பிரமாண பத்திரம் மீண்டும் தாக்கல் செய்துள்ளோம் .அதில் அறிக்கை விவரங்களையும் ,மேற்கொண்டு மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான விவரங்களை, வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மீன்பிடி காலம் தொடங்குவதாக மீனவா்கள் தரப்பில் கூறப்படுவதால் வழக்கை பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தனா்

பின்னணி :

சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு 17022020 இல் உத்தரவு பிறப்பித்தது

இதற்கு எதிராக மீனவ அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன

இந்த வழக்கை 2022 ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் , மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது

X
Dinamani
www.dinamani.com