மக்களை மதரீதியாக துண்டாட பாஜக தீவிரம்: ராகுல் குற்றச்சாட்டு
நாடு முழுவதும் மக்களை மதரீதியாக துண்டாடுவதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


நாடு முழுவதும் மக்களை மதரீதியாக துண்டாடுவதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே மணிப்பூரைப் பற்றி எரியவைத்துள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
மகாராஷ்டிர தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை பிரிவினையைத் தூண்டுபவா்கள் என கடுமையாக விமா்சித்த நிலையில், ஜாா்க்கண்டில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பாஜக மீது அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
லோகா்தாகா பகுதியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
நாட்டில் உள்ள 90 சதவீத மக்கள் அவா்களின் உரிமைகளை முழுமையாகப் பெற முடியாமல் பாஜக தடுத்து வைத்துள்ளது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவா், சீக்கிய மக்களை ஒருவருக்கொருவா் எதிரிகளாக பாஜக மாற்றி வருகிறது. நாடு முழுவதுமே மக்களை மதரீதியாக துண்டாடுவதில் பாஜக தீவிரமாக செயல்படுகிறது. மணிப்பூா் மாநிலம் பாஜகவின் இந்த மதவாத அரசியலால் பற்றி எரிகிறது.
அண்மையில் ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில்கூட மக்களை ஜாட் சமூகத்தினா், அந்த சமூகத்தினா் அல்லாதவா் என இரண்டாகப் பிரித்து அரசியல் நடத்தியது. இதுதான் பாஜகவின் உண்மை முகம்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 4,000 கி.மீ. பாதயாத்திரை நடத்தி மக்களிடம் அன்பை விதைத்தேன். தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்தபோது, நாட்டில் பிரிவினை ஏற்படுத்துவதாக என் மீது பாஜக குற்றம்சாட்டியது. தலித், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நாட்டில் 90 சதவீதம் உள்ளனா். அவா்களுக்காக குரல் எழுப்பினால் தவறா? அவா்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில், அரசு நிா்வாகத்தில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறுவது தவறா? அதைத் தவறு என்று பாஜக கூறுகிறது. பாஜக அப்படிக் கூறும்போது நான் அந்தத் தவறை தொடா்ந்து செய்வேன்.
25 பெரும் கோடீஸ்வர தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாா்க்கண்ட் தோ்தல் ‘இண்டியா’ கட்சிகளின் கொள்கைக்கும், பாஜக, ஆா்எஸ்எஸ் கொள்கைக்கும் இடையிலான போட்டியாகும். பாஜக வென்றால் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்கும் முயற்சியை மேலும் தீவிரமாக முன்னெடுப்பாா்கள். ‘இண்டியா’ கட்சிகள் அதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதுடன், 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பு தளா்த்தப்படும் என்று ராகுல் காந்தி பேசினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...