
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடி எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு நாளை(நவ. 13) முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு வருகிற நவ. 20 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவ. 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன.
இந்நிலையில் ஜார்க்கண்டில் கோடீஸ்வர வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கட்டத் தேர்தலில் 43 தொகுதிகளில் மொத்தம் 2.60 கோடி வாக்காளர்களில் 1.37 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். முதற்கட்டமாக 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த 682 வேட்பாளர்களில் குறைந்தது 235 பேர், தோராயமாக 34%, கோடீஸ்வரர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வேட்பாளர்கள்(9.24%) ரூ. 5 கோடிக்கு அதிகமாகவும், 78 வேட்பாளர்கள் ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடி வரையிலும் சொத்துகளை வைத்திருக்கின்றனர்.
சுமார் 198 வேட்பாளர்களின் (29.03%) சொத்து மதிப்பு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி ஆகும். மேலும் 199 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையிலும் 144 வேட்பாளர்கள் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.
கோடீஸ்வர வேட்பாளர்
கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள பொட்கா தனித்தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான கண்டோமணி பூமிஜ் என்பவரின் சொத்து மதிப்பு 80 கோடி என அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை வேட்பாளர்
ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா வேட்பாளர் சுஷில் டோப்னோ, ஏழ்மையான போட்டியாளர். அவர் கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 7,000 என்றும் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகள் வாரியாக விவரம்
பாஜகவின் 36 வேட்பாளர்களில் 30 வேட்பாளர்கள் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கின்றனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்களில் 23 பேரில் 18 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். காங்கிரஸ் வேட்பாளர்களில் 17ல் 16 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்.
பிஎஸ்பி வேட்பாளர்கள் 7 பேர், ஆர்ஜேடி-4, ஐக்கிய ஜனதா தளம் -2 வேட்பாளர்கள் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.