தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம்!

உத்தரப் பிரதேச மருத்துவமனை தீ விபத்தில் பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளுக்கு முதல்வர் யோகி நிவாரணம் அறிவிப்பு
தீவிர கண்காணிப்பில் இருக்கும் காயமடைந்த குழந்தைகள்
தீவிர கண்காணிப்பில் இருக்கும் காயமடைந்த குழந்தைகள்PTI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனை தீ விபத்தில் பலியான மற்றும் காயமடைந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முதல்வர் யோகி நிவாரணத் தொகை அறிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில், வெள்ளிக்கிழமை (நவ. 15) இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தன.

இந்த சம்பவத்தையடுத்து, உயிரிழந்த குழந்தைகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதக், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்தையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது.
தீ விபத்தையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது.PTI

இதனையடுத்து, தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

உயிரிழந்த குழந்தைகளில் 7 குழந்தைகளின் அடையாளம் காணப்பட்ட நிலையில், 3 குழந்தைகளின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்து, அடையாளம் காணப்படவுள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் 40 குழந்தைகள் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் பிற்பகலிலேயே மின்கசிவு பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர், அதனைச் சரிசெய்யாமல் அலட்சியத்துடன் இருந்ததாக, சமாஜவாதி கட்சித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் சந்திரபால் சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com