மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு!

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Attack on Anil Deshmukh
காயமடைந்த அனில் தேஷ்முக் - தாக்கப்பட்ட கார்ANI
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் கார் மீது நேற்று இரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. அனில் தேஷ்முக்கிற்கும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

நேற்று மாலையுடன் மகாராஷ்டிரத்தில் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக், அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

முதலில் கேடோல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உயர்மட்ட விசாரணை

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக நாக்பூர் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது, சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயவியல் துறையினர் ஆதாரங்களை சேகரித்ததாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விசாரணை கேடோல் துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி தாக்குதல்

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 2ஆம் கட்டமாக 38 தொகுதிகளிலும் நாளை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ஆகியவை சேர்ந்த மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனை உத்தவ் அணி 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகிறது.

இதையும் படிக்க | வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு! விண்வெளியிலிருந்தும் தெரிகிறதாம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com