பட்டயக் கணக்காளர் தேர்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் வருகிற ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தேதிகளில் தமிழர் பண்டிகைகளான பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினம், விவசாயிகளுக்கான தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், தமிழர் பண்டிகை நாள்களில் பட்டயத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி. சு. வெங்கடேசன், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு’’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தேர்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு கோரிக்கை விடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, ``பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயக் கணக்காளர் தேர்வு அறிவித்திருப்பது குறித்து, தேர்வு எழுதவிருப்போரின் பெற்றோர் கவலை தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 14 முதல் 16 ஆம் தேதி வரையில் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், 14 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பட்டயக் கணக்காளர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழகத் தேர்வர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
நாட்டின் பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி, துர்கா பூஜை போன்று பொங்கல் பண்டிகைகள் தமிழக மக்களின் உணர்வுகளை உள்ளடக்கியது’’ என்று தெரிவித்துள்ளார். தேர்வாணையத் தலைவருக்கு கோரிக்கை விடுத்ததுடன், தேதியை மாற்றியமைக்க பரிசீலிக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.