பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்?

மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்பு..
தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே
தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டேANI
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வர் இன்றைக்குள் முடிவு செய்யப்பட்டு, நாளை பதவியேற்க வேண்டிய கட்டாயத்துக்கு மகாயுதி கூட்டணியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

14-ஆவது மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. புதிய முதல்வர் நாளை பதவியேற்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரும் சூழல் உருவாகும்.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி, வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 132, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றன.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கூட்டணிக்கு மொத்தம் 50 இடங்களே கிடைத்தன.

புதிய முதல்வர் யார்?

மகாயுதி கூட்டணி உருவாக்கப்பட்டபோது, பெரும்பான்மை இல்லாத போது சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க பாஜகவும் தேசியவாத காங்கிரஸும் ஒப்புக் கொண்டன.

பாஜக தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று, தேவேந்திர ஃபட்னவீஸும் அப்போது துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால், இம்முறை பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரே முதல்வராக பதவியேற்கும் சூழல் நிலவுகிறது.

சிவசேனையின் ஷிண்டே மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனை பாஜக தலைவர்கள் ஏற்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக அறிவித்தாலும் ஆதரவு அளிப்பேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இன்று நடைபெறும் மகாயுதி கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் ஃபட்னவீஸை முதல்வராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறை ஒதுக்கீடு கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை பதவியேற்பு

மும்பையில் உள்ள வான்கடே மைதானம் அல்லது சிவாஜி பூங்காவில் செவ்வாய்க்கிழமை(நாளை) மாலை பதவியேற்பு நிகழ்வு நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் நாளை காலை அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக மூத்த தலைவர்களும் மும்பை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com