மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இன்று தலைவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல்
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினரால் 12 இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நவம்பர் 29 வரைத் தொடர்ந்தது.
மும்பையில் 8 இடங்களில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள், காவல்துறையினர் உள்பட 175 பேர் கொல்லப்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நவ. 29 அன்று தேசிய பாதுகாப்புப் படை நடத்திய ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ தாக்குதலில் தாஜ் ஹோட்டலில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தலைவர்கள் நினைவஞ்சலி
இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு தலைவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுநாளில், தங்கள் உயிரை இழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த நமது முழு நாட்டுடனும் இணைந்துகொள்கிறேன்.
நமது மக்களைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்தியா எல்லா வகையான பயங்கரவாதத்தையும் தோற்கடிக்க உறுதியாக உள்ளதை மீண்டும் வலியுறுத்தும் நாளாக இது உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கடமையில் உன்னதத் தியாகம் செய்து மிகுந்த தைரியத்துடன் போராடிய பாதுகாப்பு பணியாளர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அந்த காயங்களை நாங்கள் நினைவில் கொண்டுள்ளோம், மறக்க மாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிவில், “26/11 மும்பை தாக்குதல்களில் பயங்கரவாதிகளுடன் போராடி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு என் உணர்ச்சிப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன். பயங்கரவாதம் மனித குலத்தின் மீது படிந்தகறையாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மை அற்ற மோடி அரசின் கொள்கையை உலகம் முழுவதும் பாராட்டுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகளில் இந்தியா உலகின் தலைமையாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.