மகாராஷ்டிர தேர்தல்: 85% வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு! பாஜகவில் ஒருவர்கூட இல்லை!

மொத்த வேட்பாளர்களில் 85 சதவிகிதத்தினர் டெபாசிட் இழப்பு! காங்., சுயேச்சை வேட்பாளர்கள் அதிகமானோர் படுதோல்வி..!
மகாராஷ்டிர தேர்தல்: 85% வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு! பாஜகவில் ஒருவர்கூட இல்லை!
ANI
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 85 சதவிகிதத்தினர் டெபாசிட் இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களே அதிகம்!

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு மிக பலத்த அடியைக் கொடுத்துள்ளது. சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி 10, சமாஜவாதி 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.

ANI

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், அவர் போட்டியிட்டுள்ள தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில், ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே, அவர் வேட்புமனு தாக்கலின்போது செலுத்திய டெபாசிட் தொகை அவருக்கு திருப்பியளிக்கப்படும். அந்த வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான டெபாசிட் தொகை வேட்பாளர் ஒருவருக்கு தலா ரூ. 10,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்சி, எஸ்டி பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ. 5,000 செலுத்தினால் போதும்.

மகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 4,136 வேட்பாளர்களில் 3,513 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இதனால் மொத்தம் ரூ.3.50 கோடி தொகை வேட்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் டெபாசிட் தொகை இழப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது இந்த தேர்தலிலே என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 83.1 சதவிகித வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அதில் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட டெபாசிட் தொகை இழப்பு ரூ. 3.40 கோடி. கடந்த 2019 ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 80.5 சதவிகித வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அதில் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட டெபாசிட் தொகை இழப்பு ரூ.2.60 கோடி.

இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். சிவசேனை(உத்தவ் பிரிவு) வேட்பாளர்கள் 8 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ்(என்சிபி - சரத் பவார் பிரிவு) வேட்பாளர்கள் 3 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த கூட்டணியில் போட்டியிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 2 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை குறிப்பாக, நாஷிக் மாவட்டத்தில்தான் அதிக இடங்களில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களைப் பொறுத்தவரை, மும்பை புறநகர் பகுதிகளில் 261 வேட்பாளர்களும், புணேயில் 260 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஆளும் மகாயுதி கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனை கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் டெபாசிட் இழந்துள்ளார் (தார்யாபூர் தொகுதி - மராவதி மாவட்டம்). அதேபோல, அஜீத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸில், 5 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

இந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த எந்தவொரு வேட்பாளரும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு படுதோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com