
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியைச் சந்தித்துள்ளது.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் முடிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
சுமார் 12 பக்க ஆவணத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி எழுப்பிய வாக்காளர் தரவுகள் குறித்த சந்தேகங்களைக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதலாவதாக, மகாராஷ்டிரத்தில் தேர்தலின்போது வாக்காளர்களை தன்னிச்சையாக நீக்கியது மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரேநேரத்தில் சுமார் 10,000 வாக்காளர்களைச் சேர்த்தது,
இரண்டாவதாக, வாக்குபதிவின் கடைசி நேரத்தில் வாக்கு விகிதம் எதிர்பாராத அளவு அதிகரிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | பாதுகாப்பானதா, மினரல் வாட்டர்?
அதாவது 'மகாராஷ்டிரத்தில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை இதுவரை இல்லாத அளவுக்கு 47,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. வாக்காளர்கள் அதிகரித்துள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஆளும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
துல்ஜாபூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வெவ்வேறு புகைப்படங்கள், பெயர்களைக் கொண்டு போலி ஆதார் அட்டைகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளது.
1999 முதல் 2014 வரை காங்கிரஸ் வசம் இருந்த துல்ஜாபூர் தொகுதியில் பாஜக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வாக்குப்பதிவு தரவுகளில் முரண்பாடுகள் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் வாக்குப்பதிவு நாளில் மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் வாக்கு விகிதம் 58.22 சதவீதமாக இருந்தது, இரவு 11.30 மணியளவில் 65.02 சதவீதமாகவும் இறுதியாக 66.05% ஆகவும் உயர்ந்தது எப்படி என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
வாக்குப்பதிவின் இறுதிநேரத்தில் (நவ. 20 மாலை 5 மணி முதல் 6 மணி வரை) 76 லட்சம் வாக்குகள் பதிவானது நம்பமுடியாதது, இதுவரையிலான தேர்தல்களில் கேள்விப்படாதது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.