நபிகள் நாயகம் குறித்து அவதூறு... மதத் தலைவர் மீது 67 வழக்குகள் பதிவு!

மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய ஹிந்து மதத் தலைவர் மஹந்த் ராம்கிரி மகாராஜ் மீது மாநிலம் முழுவதும் 67 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மஹந்த் ராம்கிரி மகாராஜ்
மஹந்த் ராம்கிரி மகாராஜ்
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரத்தில் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்த ஹிந்து மதத் தலைவர் மஹந்த் ராம்கிரி மகாராஜ் மீது மாநிலம் முழுவதும் 67 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ராம்கிரி மகாராஜ் பகிர்ந்த சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளையும் தகவல்களையும் இணையத்தில் இருந்து அகற்றிவருவதாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மஹந்த் ராம்கிரி மகாராஜ் மீது இஸ்லாம் மதம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் அவதூறாகப் பேசியதாக மாநிலம் முழுவதும் இதுவரை 67 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத் தலைமை வழக்கறிஞர் வீரேந்திர சராஃப், ராம்கிரி மகாராஜ் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனக் கூறிய மனுவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

வழக்கறிஞர் வாசி சையது மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2014 முதல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வகுப்புவாத நடவடிக்கைகள் தொடர்ந்து மாநில மற்றும் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமியர்களைப் புறக்கணிப்பது, கூட்டுப் படுகொலை செய்வது, கலவரங்களை ஏற்படுத்துவது போன்ற பல விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுதாரர்களின் சார்பில் பேசிய வழக்கறிஞர் இஜாஸ் நக்வி, ராம்கிரி மகாராஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், ஷிண்டே அவருடன் மேடையில் பகிர்ந்து, மாநிலத்தில் சாமியார்களைப் பாதுகாப்பதாக வாதிட்டார்.

அதேபோல பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே அவதூறாகப் பேசியதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நக்வி குறிப்பிட்டார் .

ஆனால், நீதிபதிகள் ரேவதி மொஹிதே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் கொண்ட அமர்வு, ராம்கிரி மகாராஜின் வீடியோக்களை அகற்றுவது மற்றும் ரானே மீது அவதூறாகப் பேசியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான வழக்குப்பதிவுகள் தொடர்பான மனுக்கள் ஏற்கனவே தாமதமின்றி விசாரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டனர்.

வெறுப்புப் பேச்சுத் தொடர்பான கேள்விக்கு, "அவர்கள் பேசுவதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், காவல்துறை இது தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

எக்நாத் ஷிண்டே மற்றும் ராம்கிரி ஒரே மேடையில் இருப்பதால் மட்டுமே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தவறான நோக்கங்களை நிரூபிக்க வேண்டும். தவறு நடந்தால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். நீங்கள் (நக்வி) இந்த விஷயத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றுகிறீர்கள். நீங்கள் முக்கிய பிரச்சினையிலிருந்து விலகினால் அது தவறாகும். உங்கள் முக்கிய பிரச்சினை வீடியோக்களை அகற்றுவது தான்" என்று தெரிவித்தனர்.

ராம்கிரி மகாராஜ் மீது ஏற்கனவே செப்டம்பர் 19 வரை 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களின் மனுவிற்கு சராஃப் எதிர்ப்பு தெரிவித்தார்.

முதல்வரின் பெயரை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சராஃப் கூறியதற்கு ஒப்புக்கொண்ட நீதிபதிகள் அமர்வு மனுதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது.

இந்த மனுவை வருகிற ஆக்டோபர் 17 அன்று மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com