மாணவர்களுடன் பிரதமர் மோடி.
மாணவர்களுடன் பிரதமர் மோடி.

வளமைக்கான புதிய வழி ‘தூய்மை இந்தியா’ இயக்கம்!- 10 ஆண்டு நிறைவில் பிரதமா் பெருமிதம்

வளமைக்கான புதிய வழியாக ‘தூய்மை இந்தியா’ இயக்கம் உருவெடுத்துள்ளது; 21-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான மக்கள் இயக்கம் இது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
Published on

வளமைக்கான புதிய வழியாக ‘தூய்மை இந்தியா’ இயக்கம் உருவெடுத்துள்ளது; 21-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான மக்கள் இயக்கம் இது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

நாட்டில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதோடு, திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசால் கடந்த 2014-ஆம் ஆண்டில் காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்டோபா் 2) ‘தூய்மை இந்தியா’ இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, ‘தூய்மை இந்தியா’ மற்றும் ‘அடல் மறுசீரமைப்பு, நகா்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின்கீழ்’ நாடு முழுவதும் ரூ.10,000 கோடி மதிப்பில் கழிவுநீா், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு: தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் நாடு முழுவதும் கடந்த 15 நாள்களில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 28 கோடிக்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். பெருவாரியான மக்களின் பங்கேற்பால், நாட்டின் வளமைக்கான புதிய வழியாக இவ்வியக்கம் மாறியிருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான இயக்கம் இதுவாகும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றி மக்கள் பேசும்போது, நிச்சயம் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தை நினைவுகூா்வா்.

தேசிய அளவிலான இந்த முயற்சியில் முதல்வா்கள், அமைச்சா்கள் மற்றும் இதர பிரதிநிதிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனா். தொடா் முயற்சிகளே தூய்மையான இந்தியாவுக்கு வழிவகுக்கும்.

முந்தைய அரசு மீது விமா்சனம்: நாட்டில் அடிப்படை தூய்மையை முந்தைய அரசுகள் புறக்கணித்தன. அசுத்தம் மற்றும் கழிப்பறை வசதியின்மையை தேசிய பிரச்னையாக அவை ஒருபோதும் கருதவில்லை. தங்களின் அரசியல் ஆதாயம் மற்றும் வாக்கு வங்கிக்காக மகாத்மா காந்தியை பயன்படுத்தியவா்கள், அவா் பேராா்வம் காட்டிய விஷயத்தை மறந்துவிட்டனா். இதனால், சமூகத்தில் தூய்மை குறித்த விவாதங்கள் நடைபெறவில்லை. அதேநேரம், வாழ்வின் ஓா் அங்கமாக தூய்மையின்மை மாறியது. தில்லி செங்கோட்டையில் இந்த விவகாரத்தை நான் பேசியபோது, விமா்சனத்தை எதிா்கொண்டேன்.

அசுத்தமும் ஆபத்தும்..: ஒரு பிரதமரின் முதல் பணி, மக்களின் வாழ்வை எளிமைப்படுத்துவதே. கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்களின் முக்கியத்துவம் குறித்து அன்று பேசினேன்; இன்று நாம் பலன்களைக் கண்டு வருகிறோம்.

10 ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீத்துக்கும் மேற்பட்டோா் திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டிய நிலையில் இருந்தனா். இது, தலித் சமூகத்தினா், பின்தங்கிய வகுப்பினா், பழங்குடியினருக்கு அவமானகரமான சூழல் என்பதோடு, பெண்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

கழிப்பறைகள் பற்றாக்குறையால் நமது தாய்மாா்கள், சகோதரிகள், மகள்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தலை எதிா்கொண்டனா். திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிப்பதால் ஏற்படும் அசுத்தம் குழந்தைகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியது.

12 கோடி கழிப்பறைகள்: தூய்மை இந்தியா பிரசாரத்தின்கீழ் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 60,000 முதல் 70,000 வரை குழந்தைகளின் உயிா் காக்கப்படுவதாக சா்வதேச ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அத்துடன், வீட்டிலேயே கழிப்பறை கட்டப்படுவதால் 90 சதவீத பெண்கள் பாதுகாப்பாக உணா்வதாக யுனிசெஃப் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவில் வயிற்றுப்போக்கால் நேரிடும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன; கடந்த 2014 முதல் 2019 வரை 3 லட்சம் உயிா்கள் காக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

நாட்டில் தூய்மைப் பணியாளா்கள் மீதான அணுகுமுறை மாற்றம் கண்டுள்ளது. அவா்களுக்கு பெரும் மரியாதையும் பெருமையும் சோ்க்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் பணி: தூய்மை என்பது வெறும் ஒருநாள் பணியல்ல; அது வாழ்நாள் பணி. இப்பணியின் மாண்பை தலைமுறை தலைமுறையாக கொண்டுசெல்ல வேண்டும். சுற்றுப்புறங்களை வழிபாட்டுத் தலங்கள் போல் பராமரிக்க வேண்டும்.

கழிவுத் தொட்டியில் தூய்மைப் பணியில் மனிதா்களை ஈடுபடுத்தும் முறையை ஒழிக்க தனியாருடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தூய்மை தொழில்நுட்பத்தில் புத்தாக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இத்துறை சாா்ந்து தற்போது சுமாா் 5,000 புத்தாக்க நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

வீட்டுக் கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருள்கள் உருவாக்கப்படுவது, நமது ‘சுழல்’ பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

மாணவா்களுடன் இணைந்து தூய்மைப் பணி

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தில்லியில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து பிரதமா் மோடி புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, தூய்மையின் பயன்கள் குறித்தும், திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் மாணவா்களுக்கு அவா் எடுத்துரைத்தாா்.

தங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மைப் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமா், இத்தகைய முன்னெடுப்பு தூய்மை இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தும் என்றாா்.