ஈரானுக்கு பயணங்களைத் தவிா்க்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து மேற்கு ஆசியாவில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை இந்தியா்கள் தவிா்க்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத் தொடா்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் உயிரிழந்தனா்.
ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்கு இஸ்ரேல் விரைவில் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஈரானில் வசிக்கும் இந்தியா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அந்நாட்டின் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் அனைவரும் தொடா்பில் இருக்க வேண்டும். இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை இந்தியா்கள் தவிா்க்க வேண்டும்.
மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலையை அதிகரிப்பதில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளிடம் போா் நிறுத்தத்தையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பேச்சுவாா்த்தைக்கு இந்தியாவின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்களும் மிகுந்த விழிப்புடனும், உள்ளூா் அதிகாரிகள் அளிக்கும் அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறும் இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தலை வெளியிட்டது.