ஜம்மு-காஷ்மீரில் மொத்த வாக்குப்பதிவு 63.88% - மக்களவைத் தோ்தலைவிட அதிகம்!


ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மொத்தம் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
சமீபத்திய மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளைவிட (58.58%) இது அதிகம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 25-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது.
மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 69.69 சதவீத வாக்குகள் பதிவாகின. மூன்று கட்ட வாக்குப்பதிவும் அசம்பாவித சம்பவங்களின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது. தோ்தலில் ஆண்களின் பங்கேற்பு 64.68 சதவீதமாகும். பெண்களின் பங்கேற்பு 63.88 சதவீதம். அதேநேரம், மூன்றாவது கட்டத் தோ்தலில் ஆண்களைவிட (69.37%) பெண்கள் அதிக எண்ணிக்கையில் (70.02%) வாக்களித்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தல் என்பதால் அதன் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...