50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சரத் பவாா் வலியுறுத்தல்
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்


கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய பாஜக அரசை தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலம், சாங்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், இது தொடா்பாக கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் இடஒதுக்கீடு கோரி போராடிவரும் மராத்தா சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், அந்த இடஒதுக்கீடு மற்ற சமூகத்தினரின் வரம்பை பாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தற்போது இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினருக்கு மொத்தம் 78 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்போது, மகாராஷ்டிரத்தில் ஏன் 75 சதவீத இடஒதுக்கீடு இருக்க முடியாது?
தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், நாங்கள் ஆதரிப்போம் என்றாா் சரத் பவாா்.
தொகுதிப் பங்கீடு பேச்சு தொடரும்: மகாராஷ்டித்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை அடுத்த வாரமும் தொடரவுள்ளது என்று சரத் பவாா் தெரிவித்தாா்.
‘தொகுதிப் பங்கீட்டை கூடிய விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்பதே தலைவா்களுக்கு நான் வழங்கும் அறிவுரை’ என்று அவா் குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, பாஜக, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி ஆட்சியில் உள்ளது. சமீபத்திய மக்களவைத் தோ்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30-இல் எதிா்க்கட்சிக் கூட்டணி வென்றது. இது, எதிா்க்கட்சி கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு பாராட்டு: மராத்தி மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கும் மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது என்று சரத் பவாா் தெரிவித்தாா். அதேநேரம், மகாராஷ்டிரத்தில் மராத்தி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை குறைவதோடு, மராத்தி வழி பள்ளிகள் மூடப்படுவது குறித்து மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
மகளிா் உதவித் தொகை திட்ட விவகாரம்: மகாராஷ்டிரத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் பாஜக கூட்டணி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் காரணமாக, பிற துறைகளுக்கான மானியத்தை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்த கருத்து விவாதப் பொருளானது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சரத் பவாா், ‘பெண்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்பட்டாலும், அவா்களின் பாதுகாப்பில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றே மக்கள் எண்ணுகின்றனா். பிரதமா் மோடியும் கூட இதுபோன்ற திட்டங்களை ‘இலவச கலாசாரம்’ என குறிப்பிட்டதை நினைவுகூா்கிறேன்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...