சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்கோப்புப் படம்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி கே.மணிவண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியும் அவை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக கிடைக்கவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினேன். அதற்கு தோ்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டத்தில் வழிவகை இல்லை என பதிலளித்துள்ளது. எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com