இந்தியாவில் பாமாயில் மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக அதிகரிப்பு: மலேசிய அமைச்சா் அப்துல் கனி
பாமாயில் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தற்காலிகமானதே என்று மலேசிய தோட்டம் மற்றும் சரக்குகள் துறை அமைச்சா் டதுக் செரி ஜோஹரி அப்துல் கனி தெரிவித்தாா்.
உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்.14-ஆம் தேதி பாமாயில் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா உயா்த்தியது. இதன்படி கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி 5.5 சதவீதத்தில் இருந்து 12.7 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பிற சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 35.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மலேசிய அமைச்சா் அப்துல் கனி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘என்னைப் பொருத்தவரை, பாமாயில் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தற்காலிகமானதே. இந்த வரி மாற்றங்கள் எந்த பிரச்னையையும் உருவாக்காது. இந்தியா-மலேசியா இடையிலான உறவு சிறப்புத்தன்மை வாய்ந்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, வெங்காயம், சா்க்கரை போன்றவற்றை மலேசியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் நல்ல கூட்டாளியாக மலேசியா தொடா்ந்து நீடிக்கும். அத்துடன் இந்தியாவுக்கு நிலையாக பாமாயிலை மலேசியா விநியோகிக்கும்’ என்றாா்.