தில்லி முதல்வர் அதிஷிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தில்லி முதல்வர் அதிஷிக்கு சிவில் லைன்ஸில் உள்ள 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோட்டில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவல்பூர்வ இல்லத்தில் தற்போதைய முதல்வர் அதிஷி முன்னறிவிப்பின்றி குடியேறியதால் அவரது உடைமைகளை பொதுப் பணித்துறையினர் வலுக்கட்டாயமாக கடந்த புதன்கிழமை வெளியேற்றினர்.
பொதுப்பணித்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தக் களேபரத்தின் பின்னணியில் துணைநிலை ஆளுநர் இருப்பதாக முதல்வர் அலுவலகமும் ஆம் ஆத்மி கட்சியும் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான எண். 6, பிளாக்ஸ்டாப் சாலை பங்களா பொதுப்பணித்துறையால் பூட்டப்பட்டது.
பொதுப்பணித் துறை வழங்கிய கடிதத்தில், சிவில் லைன்ஸில் உள்ள பங்களா, உரிய செயல்முறைகள் முடிந்த பின்னர், முதல்வர் அதிஷிக்கு முறையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்த மாத தொடக்கத்தில் பங்களாவை காலி செய்ததில் இருந்து ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியவை தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.